(ப. இ.) நவாக்கரி சக்கரத்து நிலைபெறும் திருவருள் ஒளி ஓராண்டுப் பயிற்சியில் உயிருடன் கலக்கும். அம்மை வழிபாடாகிய நோன்பினை முட்டின்றிச் செய்துவந்தால் திருச்சிற்றம்பலத்தாடும் சிவ பெருமானின் திருச்சிலம்பொலி கேட்கும். அது மணியொலி முதல் பத்து வகையாகக் கூறப்படும். ஈண்டு மணி யொலியே கேட்கப்படும் என்றலும் ஒன்று. திருவருள் ஒளியிற் கலத்தலாற் பூதத் தீயினை வெல்லுவர். (72) 1366. கண்டஇச் சத்தி இருதய பங்கயங் கொண்டஇத் தத்துவ நாயகி யானவள் பண்டையவ் வாயுப் பகையை யறுத்திட இன்றென் மனத்துள் இனிதிருந் தாளே. (ப. இ.) திருவருளம்மை நான்காம் நிலையாகிய நெஞ்சத் தாமரையின்கண் வீற்றிருந்தருள்வள். அவள்தம் அருள் துணையால் நான்காம் பூதமாகிய காற்றினை வெல்லுவர். அம்மை உள்ளத்தின்கண் உயிர்க்குயிராய் இனிதிருந்தனள். (அ. சி.) கண்ட இச் சத்தி - மணிபூரகத்தில் காணப்பட்ட இந்தச் சத்தி. வாயுப்பகையை அறுத்திட - பிராணாயாமம் கைகூட்டினால். (73) 1367. இருந்தவிச் சத்தி இருநாலு கையிற் பரந்தஇப் பூங்கிளி பாச மழுவாள் கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங் குரந்தங் கிருந்தவள் கூத்துகந் தாளே.1 (ப. இ.) திருவருள் அம்மை எட்டுத் திருக்கைகளுடன் திகழ்வள், ஆறு திருக்கைகளிலும் அறுபகை செறும் ஆறுபடைக்கலங்கள் தாங்குவள். அவை முறையே கயிறு, மழு, வாள், வாள்விலக்கி, வில், அம்பு என்பன. வாள்விலக்கி - கேடகம். மற்றைய இரண்டு திருக்கைகளுள் ஒன்று அஞ்சலி அடையாளம். மற்றொன்று புகலருள் அடையாளம். அஞ்சலென்றமைப்பது சொல்லாதலின் அத் திருக்கையின் அகத்தே சொல்லுறுப்பாம் கிளியும் அமைக்கப்பெறும் ஆர்வ மேலீட்டால் ஆரவாரித்து ஆருயிர் உய்ய அப்பன் திருக்கூத்துக் கண்டருள்வள். குரந்து - குரைத்து. ஆரவாரித்து. (அ. சி.) இருநாலுகை - எட்டுக்கை; பரசம் - மழு - வாள் கேடகம் - வில் - அம்பு - அபயம் - வரதம். அபயகரத்தில் கிளி. இவ்வாறு கொள்க. குரந்து - ஆரவாரித்து. (74) 1368. உகந்தனள் பொன்முடி முத்தார மாகப் பரந்த பவளமும் பட்டாடை சாத்தி மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து தழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.2
1. தோலும். 8. திருக்கோத்தும்பி, 18. 2. மின்தொத்திடு. 8. திருக்கோவையார், 246. " பச்சை. அப்பர், 6. 17 - 7.
|