(ப. இ.) குறப்பெண்ணாகிய வெள்ளிமலை மலையாள் - திருவருள் அம்மை. செந்தமிழ்த் திருமுறை வழியே சிறப்புடன் பூசனைபுரியும் மெய்யடியார்கட்கு அவர்களுடைய பிறப்பை அறுப்பன். நானெறிப் பெருந்தவத்தை நல்குவன். அறியாமையான் நிகழும் சிவனை மறக்கும் மறப்பை அறுப்பன் 'சிவயநம' என்னும் திருவைந்தெழுத்தைக் கணித்து இடையறாது வழிபட வைப்பன். (அ. சி.) குறப்பெண் - குறிஞ்சி நிலப்பெண். பார்வதி. (2) 1499. தாங்குமின் எட்டுத் திசைக்குந் தலைமகன் பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும் ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத் தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே.1 (ப. இ.) எட்டுத்திசைக்கும் தலைமகனோடு கூடி விளங்கும் திருவருளம்மையை உள்ளத்தாமரையினிடத்து இடையறாது உன்னுங்கள். மணங்கமழ்கின்ற மலர்சூடிய கூந்தலினையுடைய திருவருள் அம்மையின் திருவடியை வழிபடும் மெய்யுணர்வினையுடையார்க்கு நீங்கா ஒளி நீலமாகிய திருவருள் வீழ்ச்சி தொடர்ந்து அருள்புரியும். நீலம் - திருவருள்: உவமையாகுபெயர். திருவருள் வீழ்ச்சி : சத்திநிபாதம். (அ. சி.) தாங்குமின் - நினையுங்கள். ஒளி நீலம் - நீல ஒளி, சத்தி. (3) 1500. நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும் பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன் அணுகிய தொன்றறி யாத வொருவன் அணுகும் உலகெங்கும் ஆவியு மாமே. (ப. இ.) பலவாகிய நறுமலர்களைத் தூவித் திருவருளம்மையைப் பணிந்தாலும், அப் பணிவின்வழியே அணுகினும் மெய்யுணர்வினையே நல்குவள். சிவபெருமான் வேறறநிற்பினும் அணுகிய ஆருயிர்க் கிழவன் அவனருளாலன்றித் தன்னறிவால் காணும் தகைமையன் அல்லன். அச் சிவபெருமான் உயிர்க்குயிராய் நிற்பதுமட்டுமன்றி ஒன்றோடொன்று நெருங்கிச் சுழலும் அனைத்துலகினுக்கும் ஆவியாகவும் நின்றருள்கின்றனன். (4)
தீவிரதரம் (முறுகல்) 1501. இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி குருவென வந்து குணம்பல நீக்கித் தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால் திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.2
1. மிக்கதொரு. சிவஞானசித்தியார். 8. 2 - 19. 2. இனையபல. சிவப்பிரகாசம், பொது, 30. " பசித்துண்டு. சிவஞானபோதம், 8. 1 - 2.
|