60
 

கூத்தினை அவனருளால் கண்டபின் ஒப்பில்லாத அளவிலா ஊழிகள் அமர்ந்திருந்தேன்.

(அ. சி.) யுகம் - ஆண்டு (சதுர்யுகக் கணக்குகள் எல்லாம் பாரத காலத்தில் வியாசரால் வகுக்கப்பட்டன). யுகாதி - வருடப்பிறப்பு என்பதை நோக்க.

(2)

137. இருந்தவக் காரணங் கேளிந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச்1 சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

(ப. இ.) செம்பொருளின் துணிவாம் சித்தாந்த முதன்மை மாணவர் எழுவருள் ஒருவனாம் இந்திரனே! என்னைச் சிவபெருமான் தென்னாட்டின்கண் இருத்தியருளிய காரணம் கூறுகின்றேன் கேட்பாயாக. எல்லாவுலகங்கட்கும் தூமாயைச் செல்வ உலகத்துக்கு முழு முதல்வியாம் உடையாள் அருந்தவச் செல்வி எனப்படுவள். அவள் அனைத்துயிரும் சிவ வழிபாட்டுத் தவத்தினைக் கை ஏற்றுப் புரிதற்பொருட்டுத் தானே தவக்கோலம் பூண்டு சிவவழிபாடியற்றி யுணர்த்தியருளினள். அதனால் அருந்தவச் செல்வி எனப் பெயர் பூண்டனள். அவள் திருவடியை அடியேன் நீங்காப் பெருங்காதல் ஓங்குதலான் வழிபட்டு இருந்து வந்தனன்.

(அ. சி.) புவனா. . . செல்வி - புவனேசுவரி.

(3)

138. மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு2
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

(ப. இ.) திருமூல நாயனார் தம் மெய்கண்ட மாணவருள் ஒருவராகிய மாலாங்கரைப் பார்த்து அருளுகின்றனர். மாலாங்கரே! சிவவுலகை நீங்கி ஓங்கிய தென்தமிழ் நாட்டகத்துக்கு அருள் என்னைக் கொண்டுவந்த காரணம் கூறுகின்றேன் கேள். சிவபெருமான் திருமலைக்கண் அழகிய நீலவண்ணத் திருமேனியும், நேரிய பொன்மணி அணிகளும் பூண்ட அம்மையுடன் திருவைந்தெழுத்தே திருவுருவாகக் கொண்டு ஒலிமுடிவாம் நாதாந்தத்துச் செய்தருளும் திருக்கூத்தின் அடிப்படை யுண்மைக் காரணங்களை மொழிந்தருளினன். அத்தகைய அருளொழுக்கு நிறைந்த தமிழ்முறையினை வேதமெனவும் சிவாகமம் எனவும் கூறுப. அதைச் செப்புதற் பொருட்டே யான் வந்தேன். நீலாங்கம் - கரிய அழகிய. மூலாங்கம் - அடிப்படை யுண்மைக் காரணங்கள். சீலம் - ஒழுக்கம்.

(அ. சி.) நீலாங்க . . . . . வேதம் - தமிழ் நான்மறை. (அறம் - பொருள் - இன்பம் - வீடு.)

(4)


1. எண்ணி 12. திருக்குறிப்புத். 51.

" துணையி. அப்பர், 5. 15 - 4.

2. நீலமேனி. ஐங்குறு நூறு, கடவுள் வாழ்த்து.