அழியவே கொடுமையில்லாத திருவருள் ஒளி வெளிப்படும். வெளிப்பட்டு உள்ளம், உரை, உடல் என்னும் முக்கருவியினாலும் இயற்றப்படும் படர்தல் பாடல் பாடுகிடத்த (பணிதல்) லாகிய மூன்று திருத்தொண்டுகளையும் கைக்கொண்டொழுக அருளும். பிணிமுனைப்பால் எழும் தற்புகழ்ச்சியினை மாளச்செய்யும் திருவடியைத் தந்து என்றும் ஒன்றுபோல் நின்று நிலைபெறுமா றருளும். பிணி - கட்டு: ஆணவம். (அ. சி.) மாச்சற்று - ஒடுங்கச் செய்து. மாள்வித்து - பசுத்துவத்தை ஒழித்து. காச்சற்ற - கொடுமையில்லாத. கடன் மூன்றும் - முக்கரணங்களால் செய்யப்படும் காரியங்கள். வாச்சபுகழ் - தற்புகழ்ச்சி. (6) 1570. இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும் பதிவித்த பாதப் பராபரன் நந்தி கதிவைத்த வாறும்மெய் காட்டிய வாறும் விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே. (ப. இ.) அடியேனுடைய உள்ளத்தும் கள்ளமிலாக் கண்ணகத்து, உச்சியிலும் தன்னுடைய அரும்பெறல் திருவடியைப் பதிவித்த தொழப்படும் தேவர் தொழப்படும் பெரும்பொருள் நந்தி திருவடிப்பேறாகிய கதியமைத்தவாறும், சிவகுருவாய் எழுந்தருளிவந்து மெய்ப்பொருள் உணர்த்தியவாறும், திருமறை திருமுறைகளாகிய செந்தமிழ் வேதாகம விதி வைத்தவாறும் அவனருளால் அல்லாமல் ஆவிகளின் சுட்டறிவு சிற்றறிவுகளான் வெளிப்படுத்திக் கூற ஒண்ணா தென்க. (7) 1571. திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப் பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக் குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக் கருவழி வாற்றிடக் கண்டுகொண் டேனே1 (ப. இ.) அடியேன் முடியில் திருவடியை வைத்தருளலும், திருக்கடைக்கண் நோக்கமருளலும் செய்தருளித் தன் பெருவடிவாகிய சிவ நிறைவினைத் தந்தருளியவன் பெரும்பொருள் நந்தியாகும். இவ்விரண்டும் முறையே திருவடி தீக்கை எனவும் திருநோக்கத் தீக்கை எனவும் கூறப்படும். அந் நந்தியெங்கடவுளைக் குருவடிவிற் கண்டனம். அவனே நம் பிறப்பாகயி கருவழிவு ஆற்றுந் தலைவனாவன். அவனே கண்ணனைய காதலனாகிய கோவும் ஆவன். ஆவனருளால் அவன் திருவடியைக் கண்டுகொண்டேன். (8) 1572. திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந் திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந் திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
1. தேடிக். அப்பர், 4. 9 - 92.
|