(ப. இ.) அனைத்துலகின்கண் வாழும் எல்லாவுயிர்கட்கும் உயிர்க்குயிராய் நிற்கும் மெய்ப்பொருளை, எல்லா அண்டங்களும் மாயா காரியமாக வெளிப்படுதற்கு வினைமுதற் காரணமாய் நிற்கும் வித்தை, என்றும் நின்று பொன்றாப் பேரின்பத்தினைத் தெவிட்டாதருளும் வீடு பேற்று நிலைக்களமான புகலிடத்தை, அவ்விடத்து அருளால் அடியேனைப் புகவிட்ட உண்மை யறிவின்ப வடிவினனைப் பகலும் இரவும் ஓவாது பணிந்து தொழுது பெரும்பாலும் மாறுபாட்டினைத் தரும் இவ்வுலகத்திடத்து அருளால் ஆணவவல்லிருளினின்றும் நீங்கி நின்றேன். இகல் - மாறுபாடு; உலகம் நிற்பனபோன்று நில்லா நிலைமைத்து. இருள் - கார் அறிவு; அறியாமை. (அ. சி.) புகலி . . . . . டானை - மறைத்துவைத்த இடத்திலிருந்த என் உடம்பை மறையும்படி செய்தானை. (7) 142. இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. (ப. இ.) அருளால் தரப்பெற்று நடமாடுந் திருக்கோவிலாகிய இவ்வுடம்பகத்தே அளவிலாக் காலம் சிவன் இருக்கச் செய்ய இருந்தேன். வாடகை வீட்டிலிருப்பார் இருப்பு வீட்டுக்குடையவர் கட்டளைப்படியே முட்டின்றி முடியும் என்பது இதற்கு ஒப்பு. இராப் பகலற்ற இடமென்பது மறப்பு நினைப்பும் அற்று நெஞ்சம் வஞ்ச மின்றிச் சிவன் திருவடிக்கே இடமாக இருப்பது. எனவே மறவா நினைவுடன் இருந்தேன் என்பதாம். விண்ணாடவர் உற்ற போதெல்லாம் உண்ணாடித் தொழும்பதம் திருவடி அத் திருவடியே புகலிடமாக இருந்தேன். என்னையாட் கொண்டருளும் நந்தியெங் கடவுளின் திருவடிக்கீழ் தாடலைபோல் ஒடுங்கி இருந்தேன். (8) 143. ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள் ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து நானும் இருந்தேன்நற் போதியின் கீழே. (ப. இ.) திருவடியுணர்வின் முதல்வியாக விளங்கும் திருவருளால் நந்திக்குரிய திருவாவடுதுறையின்கண் குற்றமற்ற ஒன்பது கோடி ஊழிகள் தவமிருந்தேன். திருமுறைச் செந்தமிழ்த் திருப்பாட்டுக்கள் ஓதிச் சிவபெருமானை வழிபாடாகிய அருச்சனையைப் புரிந்தேன். இத் திருமுறைகளே ஞானப்பால் என்க. அதனைச் சிவபெருமானுக்குச் சூட்டுதல் ஆட்டுதல். போதம விளைவிக்கும் நிலைக்களம் போதி. அஃது அரசமரம். அறிவுக் கூறாம் பிள்ளையார் அரச மரத்தடியில் எழுந்தருளியிருப்பதும் இதனை வலியுறுத்தும். அடியேனும் அத்தகைய நல்ல போதி மரத்தின் கீழ் இருந்தேன் என்க. எனவே உளப்பான்மைக்குத் தக்கவாறே உறைவிடமும் நாடுவர் நிறையருளினர் என்பது துணிபு. (அ. சி.) நந்திநகர் - ஆவடுதுறை. (9)
|