1630. இழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்த வழிகுலத் தோர்வேடம் பூண்பர்தே வாகப் பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார் கழிகுலத் தோர்கள் களையப்பட் டாரே.1 (ப. இ.) ஒழுக்கத்தால் தாழ்ந்த குடியிலுள்ளோர் தவக்கோலம் பூணுதல் உயர்ந்த ஒழுக்கம் கைக்கொண்டு மேலோராதற்கு. இது படியாதார் படித்துக் கற்றார் ஆவதை யொக்கும். வழிவழியாக ஒழுக்க மேன்மையால் உலகோர் வழிபடத்தக்க உயர்குடியில் தோன்றியவர் தவக்கோலம் பூணுதல் மக்களிற் சிறந்த தேவராதற்காம். பழிக்கப்பட்ட புன்செயலால் பிறப்பினை வீணாக்கிக் கழிக்கத்தக்க குலத்தராயுள்ளார். தவக்கோலம் பூண்பது தங்களை நாட்டைவிட்டு அகற்றுவிப்பதற்கேயாம். (அ. சி.) இழிகுலம் - இழிந்த ஒழுக்கங்களுள்ள குடி. வழி குலம் - பிறர் வழிபடக் கூடிய ஒழுக்கமுடைய குடி. பாழ்சண்டர் - வீணர், கொடியர். கழி குலத்தோர் - பிறரால் ஒதுக்கித் தள்ளப்படக்கூடிய ஒழுக்கமுள்ள குடி. (4) 1631. பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப் பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற் பொய்யத்தவம் மெய்த்தவம் போகத்துட் போக்கியஞ் சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே. (ப. இ.) தவத்தினைப் பொய்ம்மையாகச் செய்வார் இருளுலகம் புகுந்து இன்னலுறுவர். பொய்த்தவம் உள்ளத்தில் உண்மையின்றிக் கோலத்தால் மட்டும் நடித்தல். பொய்த்தவம் செய்வார் புண்ணியராகார். பின் அதற்குப் பயன் மெய்த்தவம்போன்று நடிப்பதால் நிலையிலா உலகவின்பம் பொருந்தாவழியில் சிறிதுண்டாம் ; அத்தனையே அத்தவப்பயன். உண்மையும் திருவடியுணர்வும் மேற்கொள்ளுதலால் மெய்த்தவப் பயன்கள் நிலைக்கும். (5) 1632. பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர் பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும் உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே.2 (ப. இ.) மெய்க்கோலம் பூண்பார்க்குக் கிடைக்கும் சிறந்த உணவு முதலிய உலகியலின்பங்கள் பொய்க்கோலம் பூண்பார்க்கும் எளிதாகக் கிடைக்கின்றன. பொய்க்கோலம் செய்வார் மெய்க்கோலம்போல் நடிப்பினும் தவப்பெருமையின் உண்மையினை அறிவார் தாங்கள் மெய்த் தவவழிநின்று மேன்மையுறுவர். மேலும் பொய்த்தவத்தார்மாட்டுப் பரிவும் கொள்வர். பிச்சை - தவவுணவு.
1. ஒழுக்கமுடைமை. திருக்குறள், 133. 2. சீல. 12. நரசிங்கமுனையர், 7. " முன்பு. " கலிக்கம்பர், 6. " அச்சிவன் 10. திருமந்திரம். 1848.
|