657
 

1672. உணர்த்து மதிபக் குவர்க்கே யுணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்டு
உணர்த்துமி னாவுடை யான்தன்னை யுன்னியே.1

(ப. இ.) முற்செய்தவத்தான் சிவஞானம் எய்துதற்குரிய சிறந்த செவ்விவாய்ந்த நன்மாணவாக்கே திருவைந்தெழுத்தை யுணர்த்தி, எப்பொருட்கும் சார்பாய் முழுமுதற்சிவம் நின்றும் எவற்றினும் தோய்தலும் பற்றுச்செய்தலுமில்லாத அதன் மேலான திருவடி எல்லையுள் ஆவியினைப் புகுவித்து, முறையே : கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் நாற்புலங்களையும் மேற்கொண்டு நானெறியினையும் அறிவுறுத்தியருள்வன். ஆவிக்குரியானாகிய சிவபெருமான் தன்னை நினைந்து மேலோதியவற்றை உணர்த்தியருள்வன்.

(அ. சி.) இணக்கில் - ஒன்றோடும் பற்றுதல் இல்லாத. பராபரத்து எல்லையில் - சிவ வியாபகத்துள். உத்தரம் - வடக்கு. பச்சிமம் - மேற்கு. ஆவுடையான் தன்னை - பசுபதியை.

(11)

1673. இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.2

(ப. இ.) முழுமுதற் சிவபெருமான் திருவடிக்கண் பேரன்புபூண்டு தாழ்ந்து, நெஞ்சுநேர் இரு கையும் கூப்பல், தலைமேல் ஏறக் கூப்பல், தலை ஒன்று கையிரண்டு முழங்காலிரண்டு ஆக ஐந்துறுப்பு; இவற்றுடன் நெஞ்சமும் கூடி ஆறுறுப்பு; தலை ஒன்று, காதிரண்டு, கையிரண்டு, கால் இரண்டு நெஞ்சு ஒன்று ஓக எட்டுறுப்பு ஆகிய இம்முறையால் வணங்குவது ஐவகை வணக்கமாகும் நமக்கு வேண்டும் இன்றியமையாப் பொருள்களை வேண்டி விண்ணப்பித்தல், இறைவன்றன் எண்குணங்களையும் புகழ்ந்து போற்றல், கட்டும், யான் எனதென்னும் செருக்கும் அற வொழுகல் ஆகிய இப் பண்புகளைச் சிவகுரு அறிவுறுத்துவன். மேலும், சிவபெருமான் பண்பினையும் அறிவுறுத்துவன். இவற்றை அன்புடன் ஏற்றுக்கொள்வோன் நன்னெறி நன்மாணவனாவன். நன்னெறி - சன்மார்க்கம். இவ்வணக்கம் நம்பியாரூரர் திருவாரூரில் 'அன்பு பெருக வுருகியுள்ள மலைய அட்டாங்க பஞ்சாங்கமாக' வணங்கினாரென்பதனால் விளங்கும்.

(அ. சி.) ஐவணக்கம் - (1) கைகளால் கும்பிடுதல். (2) கைகளைத் தலைக்குமேல் தூக்கி கும்பிடுதல் (மூன்றுறுப்பு). (3) கைகள் இரண்டு, தலை ஒன்று, முழங்கால்கள் இரண்டு ஆக ஐந்து உறுப்புகள் நிலந்தோய வணங்கல். (4) மேற்கூறிய ஐந்து உறுப்புகளுடன் நெஞ்சம் நிலந்தோய வணங்கல். (5) கைகள் 2, கால்கள் 2, தலை 1, காதுகள் 2, நெஞ்சு 1 ஆக எட்டு உறுப்புக்களும் நிலந்தோய வணங்கல். இவைகளை வடமொழியாளர் ஏகாங்கம், திரியாங்கம், பஞ்சாங்கம், சாஷ்டாங்கம், அஷ்டாங்கம் என்பர். சிறையுடல் - பந்தமான சரீரம். நீயற - நீ என்பது அல்ல என்று. அறிவுக்கு - ஆன்மாவின் அறிவுக்கு

(12)


1. என்னை. அப்பர், 5. 91 - 8.

கல்லாலின் நீழற். " 6. 18 - 3.