715
 

1816. புண்ணிய மண்டலம் பூசைநூ றாகுமாம்
பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்
எண்ணிலிக் கைய மிடிற்கோடி யாகுமாற்
பண்ணிடில் ஞானியூண் பார்க்கில் விசேடமே.

(ப. இ.) சிவபூசையினை நால்வராம் நன்னெறி முதல்வர்களின் திருப்பாடல் பெற்ற திருவூர்களில் செய்யின் ஏனைய இடங்களில் செய்வதினும் நூறுமடங்கு பயன் கூடுதலாகும். சிவத்தை வழிபடும் இறப்பில் தவத்தை மேற்கொண்டுள்ள மெய்யன்பர் திருமேனிக்கண் வழிபடின் பயன் ஆயிரமடங்கு மிகுதியாகும். சிவன் திருவடியினையன்றிப் பிறிதொன்றினையும் நாடாத தானவனாம் தன்மை வாய்ந்த சிவஞானிக்கு ஐயமாகிய பிச்சை இடுவார் எய்தும் பயன் ஒரு கோடி மடங்கு கூடுதலாகும் எல்லாவற்றினும் சிறந்தது சிவஞானி உண்ட ஊணாம்.

(அ. சி.) புண்ணிய மண்டலம் - தேவகோட்டம். பண்ணியமேனி தவம் செய்தவர். எண்ணிலி - ஆசையற்ற ஞானி. ஞானியூண் பார்க்கில் - ஞானிக்கு அன்னம் அளித்தால்.

(4)

1817. இந்துவும் பானுவும் இலங்குந் தலத்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்1
இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.

(ப. இ.) இடமூக்கு வலமூக்குகளில் உயிர்ப்பு நடக்குங்கால் சிவவழிபாடு செய்யின் அதன் பயன் அசுரர்க்கு வாரியாகிய பயனாகும். இவை இரண்டின் வழியன்றி நடுநாடிக்கண் உயிரிப்படங்கி உள்ள ஒருமையுடன் சிவவழிபாடு செய்யின் அதன் பெரும் பயன் பூசை செய்யும் சிவபுண்ணியர்க்கேயாம். இப் பூசையே செப்பரும் பெரும் பூசையாகும். இந்து - இடகலை. பானு - பிங்கலை.

(அ. சி.) இந்துவும் பானுவும் - இடைகலை, பிங்கலை. வாரியாம் - பயன்படுவனவாம். இந்....டை - கும்பகத்தைச் செய்து.

(5)

1818. இந்துவும் பானுவு மென்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமு மாகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை 2யாமே.

(ப. இ.) திங்களும் ஞாயிறும் அதன்வழித்தாம் விந்துவும் நாதமும் திகழ்கின்ற ஆறுநிலைக்களங்களுக்கும் அப்பாற்பட்ட மேலிடத்தே நாட்டத்தினை நிறுத்தி, நனவில் உயிர்ப்படங்கனிார் ஒத்து சிவனிறைவிலொடுங்கிச் சிவபெருமானை வழிபடும் சிவபூசையே திருவடி சேர்க்கும் நற்பூசையாகும்.

(அ. சி.) மீதானம் - ஆறு ஆதாரங்களுக்கு மேற்பட்ட இடம். சாக்கிர அதீதம் - சாக்கிரமும் சொப்பனமும் அல்லாத நடுநிலைமை.

(6)


1. ஏரின். திருக்குறள், 14.

2. இந்துவிற். சிவஞானபோதம், 9. 3 - 2.