(அ. சி.) மாயாள் - பெண். இவர் வேண்டில் - கூடவேண்டில். வளர்பக்கம் - வளர்பிறை. அபரம் - தேய்பிறை, இருபக்கத்திலும் சூரியன் நாள் அவ்வாறு ஆகும். அந் நாட்கள் கூடுதற்கு உரிய நாள்கள்.
(3)
1903. ஆறைந்து பன்னொன்று மன்றிச் சகமார்க்கம்
வேறன்பு வேண்டுவோர் பூவரிற் பின்னந்தோ
டேறும் இருபத் தொருநா ளிடைத்தோங்கும்
ஆறின் மிகுத்தோங்கும் அக்காலஞ் செய்யவே.1
(ப. இ.) வளர்பிறையில் ஆறுநாட்களும், தேய்பிறையில் ஞாயிற்றுக்குரிய ஒன்பது நாட்களில் முதல்பிறை, எட்டாம் பிறையும், பதின்மூன்றாம் பிறையும், கருவுவாவாகிய அமாவாசையும் என்னும் நான்கு நாளும் நீங்கலாகிய ஐந்து நாட்களும் ஆகிய இருபக்கமும் கூடிப் பதினொருநாட்கள் அகத் தவத்தோராகிய யோகியர் மங்கைநல்லாரை மருவுதற்கு வாய்த்த மாண்புடைய நாட்களாகும். மெய்ப்பத்தராம் குடும்பத்துள்ளார், தங்கள் மனைவியராம் மங்கைநல்லாரை மருவுதற்கு அந் நல்லார்க்குப் பூப்பெய்திய மூன்று நாட்களும் நீங்கலாக இருபத்தேழு நாட்களும் அமிழ்தம் ஓங்கும். இந்நாட்களில் வாய்த்த வோர்நாளில் மருவுதல் பொருந்தும்.
(அ. சி.) ஆறு ஐந்து பன்னொன்று-வளர்பிறையில் ஆறு நாட்களும், தேய்பிறையில் சூரியனுக்குரிய 9 நாட்களில், 1, 8, 13 அமாவாசை ஒழிந்த ஐந்து நாட்களும் ஆகப் பதினொரு நாட்களும், சகமார்க்கம் - யோக நெறியுடையார்க்கு மார்க்கம். வேறு அன்பு - வேறு மார்க்க முடையார்க்கு. பூவரிற்பின் - மங்கையர்க்குப் பூப்பு வந்தபின். ஓங்கும் - அமுதம் பெருகும். செய்ய - கலவிசெய்ய.
(4)
1904. செய்யும் அளவிற் றிருநான் முகூர்த்தமே
எய்யுங் கலைகாலம் இந்து பருதிகால்
நையு மிடத்தோடி னன்காம நூல்நெறி
செய்க வலமிடந் தீர்ந்து விடுக்கவே.
(ப. இ.) மங்கைநல்லாரை மருவுதற்குப் பொருந்திய நற்பொழுது இரவுப்பொழுதேயாம். அவ் இரவுப்பொழுதிலும் எட்டு முழுத்தம் வாய்ப்புடையதென்ப. விந்துவைக் கருப்பையில் தங்கவிடும் காலம் ஞாயிறு திங்களைத் தன்னுள் அடக்குவதான வலப்பால் மூக்கில் உயிர்ப்புச் செல்லுங் காலம். நல்ல காமநூலின் முறைப்படி மருவுதல் செய்க. ஒருகால் இடப்பால் மூக்கில் உயிர்ப்புச் செல்லின் அதனை மாற்றி வலப்பால் விடுக்க. இந்து பருதிகானையுமிடம்: இந்து பருதி நையும் காலம். காலம், கால் என நின்றது.
(அ. சி.) அளவிற்று - சரியான காலம். இருநாள் முகூர்த்தம் - இரவுகாலம். எய்யும் கலைகாலம் - கருப்பையில் விந்துவைப் பதியவைக்கும் காலம். இந்து பருதிகால் நையும் - இந்து பருதியின் மூக்கில் சரிக்கும்
1. பரத்தையிற். இறையனார் களவியல், 43.