வருவதன்றி என்று நீங்காது இணைந்தே நிற்பதென்பதாகும். மெய்கண்டவன் - நிலைத்தவன்; புருடன் நனவின்கண் அறிதற்கருவியாலும் செய்தற்கருவியாலும் கொள்ளப்படும் புலன்கள் (நிலம்) பத்தும் இத் திருப்பாட்டின்கண் குறிக்கப்படவில்லை. கருவிகள் சொல்லப்படவே கருவிகளின் தொழிற்பாடும் அவற்றினுக்குரிய நிலமாகிய பொருள்களும் தாமே போதருமென்னுந் திருவுள்ளத்தால் ஓதாராயினர். எனவே நனவிற் கருவி முப்பத்தைந்து என்பதுடன் ஈண்டு ஓதிய இருபத்தைந்தென்பது மாறுபாடன்மை உணர்க உணரவே, ஈண்டுங் கொள்ளவேண்டுவன (2160) முப்பத்தைந்தென்பதேயாம். மேலும் கீழ்நோக்கும் பாடாகிய கீழாலவத்தை என்பதனால் ஆண்டு இப் புலன்கள் மெத்தென்று நிகழ்வதுண்மையின் அங்ஙனம் ஓதினாரென்றலும் ஒன்று. (அ. சி.) ஐயைந்து-25 தத்துவங்கள்; நிலம் முதல், புருடன் வரை. மத்திமை - புருவ நடு. பன்னான்கு - அந்தக் கரணம் நான்கும் வாயு பத்தும். புருடன்- ஆன்மா. உந்தி - கொப்பூழ். (1) 2104. முப்பதோ டாறின் முதல்நனா ஐந்தாகச் செப்பதி னான்காய்த் திகழ்ந்திரண் 1டொன்றாகி அப்பதி யாகும் நியதி முதலாகச் செப்புஞ் சிவமீறாய்த் தேர்ந்துகொள் ளீரே. (ப. இ.) அருஞ்சைவர்மெய் (2139) ஆறாறாகிய முப்பத்தாறனுள் ஒன்றித் தொழிற்படும் ஆருயிர் நாளும் ஐம்பாடு எய்தும் அவற்றுள் முதல் நிலையாகிய நனவுநிலை ஐவகைப்படும். அவை, நனவில் நனவு, நனவிற் கனவு, நனவில் உறக்கம், நனவில் பேருறக்கம், நனவில் உயிர்ப்படங்கல் என்பன. அந் நனவில் நான்கு வருமாறு: நனவிற்கனவு, நனவின் உறக்கம், நனவிற் பேருறக்கம், நனவில் உயிர்ப்படங்கல் என்பன. அந் நனவில் மூன்று வருமாறு: நனவில் உறக்கம், நனவில் பேருறக்கம், நனவில் உயிர்ப்படங்கல் என்ப. அந் நனவில் இரண்டு வருமாறு: நனவில் பேருறக்கம், நனவில் உயிர்ப்படங்கல் என்ப. அந் நனவில் ஒன்று: உயிர்ப்படங்கல். 'இரண்டு ஒன்று' என்பதனைக் கூட்டி மூன்றாகவும். தனித்தனியே இரண்டாகவும் ஒன்றாகவும் கொள்ளப்பட்டன. மண் முதலாகச் சிவமெய்யீறாகக் கூறப்படும் மெய்கள் முப்பத்தாறு. முதல்-மண். இவையனைத்தும் பதியாகிய சிவபெருமானின் திருவாணையாகும். திருவாணை - நியதி; யாப்புறவு. திருவாணை என்பது இம்மெய்கள் ஒழுங்காக நடைபெறும் நியதியாகும். (அ. சி.) முதல் நனா ஐந்தாக - சாக்கிரம் முதல் ஐந்து வகையாக. அதில் நான்கு - சாக்கிரத்தில் சாக்கிரம் ஒழிந்த ஏனைய நான்கு. சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம். இரண்டு - துரியம் துரியா தீதம். ஒன்று - துரியாதீதம். (2) 2105. இந்திய மீரைந் தீரைந்து மாத்திரை மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும் பந்தவச் சக்கரப் பாலது வாகுமே.
1. அறிதரு. சிவஞானசித்தியார், 4. 3 - 3.
|