89
 

(அ. சி.) முட்டை - உயிருடன் கூடின உடல். பார்மணம் - உலக வாசனை.

(21)

208. இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

(ப. இ.) விளக்கில் நெய்விடும் பகுதி அகல் எனவும் இடிஞ்சில் எனவும் கூறப்படும். அவ்விடிஞ்சி லிருக்கவும் விளக்கு அணைவதென்றால் எவ்வளவு வியப்போ அவ்வளவு வியப்பு உடலிருக்கவும் உயிர் நீங்கும் தன்மை. அதுபோல் உடலழியாதிருக்கவும் உயிரினைக் கூற்றுவன் கைக்கொண்டகன்றான். உலகத்தார் தம்வாணாள் முடிந்தமையை முன்னறியார். பின்னுள்ளார் இறந்தவர் பொருட்டு அழுது புலம்புவர். இவ்வுண்மையைக் கொண்டு விடிதலாகிய பிறப்பையும் இருள்வதாகிய இறப்பையும் எவரும் உணர்தல் எளிது. அங்ஙனமிருந்தும் உலகவர் உணர்கின்றிலர். உலக மயக்கத்தில் ஈடுபட்டு அதில் உலகவர் படிந்து கிடக்கின்றனர். அதனால் பின்பு நடுங்கித் துன்புறுகின்றனர். முடிஞ்சது: முடிந்ததென்பதன் போலி.

(அ. சி.) இடிஞ்சில் - அகல். முடிஞ்சது - முடிந்தது. விடிஞ்சு இருளாவது - பிறந்து இறப்பது.

(22)

209. மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவந் தொழாமல்
இடர்படர்ந் தேழா நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே.

(ப. இ.) சிவபெருமான் இதழ் விரிந்த கொன்றைமாலையைக் கண்ணியும் தாருமாகக் கொண்டவன். மாயையை உடைமையாகக் கொண்டவன். அதனால் சிவன் மாயன் என்று அழைக்கப்படுவன். ஆயின் 'மாயோன் மேய காடுறை யுலகம்' என்பதும் சிவனையே குறிக்கும் செந்தொடராவது உணர்க. அவன் தன் திருவாணையால் மாயையினின்றும் உலகினையும் உடலுறுப்புக்களையும் உண்பொருள்களையும் தோற்றுவித்து அவற்றோடு ஆருயிர்களைத் தனித்தனி புணர்ப்பித்தனன். இதுவே படைப்பாகும். அப் படைப்பினை எய்திய உயிர் அச் சிவபெருமானின் பொதுத் தன்மையாகிய இருநிலன் முதலாகச் சொல்லப்படும் எண்பேர் உருவங்களில் இயைந்த தொன்றைத் தொழுதல் வேண்டும். அங்ஙனம் தொழுதலைச் செய்யாதவர் எழுவகையாகச் சொல்லப்படும் இருள்உலகில் கிடந்து துன்புறுவர். இவ்வுலகிலும் இடர் உறுவர். பின் வினைக் கீடாகக் கருப்பையுள் புகுவர். மிகவும் விரும்பிய சுற்றத்தாரால் போற்றப்படுவர். மீண்டும் அவர்களால் கூப்பிட்டு அழுமாறு இறப்பர். எழுவகை இருளுலகமும் வருமாறு: பெருங்களிற்று வட்டம் பெருமணல் வட்டம், எரிபரல் வட்டம், அரிபடை வட்டம், புகையின் வட்டம், பெருங்கீழ் வட்டம், இருளின் வட்டமென எழுவகை நரகம்' (பிங்கலம். 412). அள்ளல், இரௌரவம், கும்பீபாகம், கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி