(ப. இ.) அப்பாகிய விருப்பும் அனலாகிய வெறுப்பும் அகலமாகிய நெஞ்சத்துக்கண் ஆருயிர் நிற்கும்போது நிகழ்வன. நெஞ்சம் - உறக்க நிலை. மேலோதிய விருப்பு வெறுப்புக்கள் அகன்ற நிலையாகிய அப்பால் நிலைக்கண் வந்து பொருந்தா. அப்பால்நிலை - உயிர்ப்படங்கல். இதற்குரிய இடம் மூலம். இந் நிலை கருவிகளுடன் கூடாநிலை. விருப்பு வெறுப்பாகிய அப்பும் அனலும் நெஞ்சத்துக்கண் கலந்தமுறை எவ்வாறெனில், உறக்க நிலையாகிய நெஞ்சம் அரனார் இருப்பிடம். அரன் - தீவண்ணத்தன். அவன் 'நள்ளிருளிலும் நட்டம் பயின்றாடும் நாதன்.' பேருறக்க நிலையாகிய மேல்வயிறு அரியின் இருப்பிடம். அரி - நீர்வண்ணத்தன். இவ் விருநிலைமையினால் நெஞ்சிடத்து 'வேண்டுதல் வேண்டாமை'யாகிய விருப்பு வெறுப்புக்கள் தோன்றுவது இயல்பு. இதுவே 'அப்பும் அனலும் கலந்ததவ்வாறென' ஓதியதாகும். (அ. சி.) அப்பும் அனலும் - விருப்பும், வெறுப்பும். வாரா - துரியா தீதத்தில் வரமாட்டா. (41) 2228. 1அறுநான் கசுத்தம் அதிசுத்தா சுத்தம் உறுமேழு மாயை உடனைந்தே சுத்தம் பெறுமா றிவைமூன்றுங் கண்டத்தாற் பேதித்து உறுமாயை மாமாயை யான்மாவி னோடே. (ப. இ.) உடன்மெய் இருப்பத்து நான்கும் தூவாமாயை உடையனவாகும். உணர்வுமெய் ஏழும் தூவாமையும் தூய்மையும் உடையனவாகும். உணர்த்துமெய் ஐந்தும் தூய்மையவாகும். இவை முறையே அசுத்தம், சுத்தாசுத்தம், சுத்தம் என்று கூறப்படும். ஒரு மாயையே பகுப்பு வேறுபாட்டால் இங்ஙனம் முத்திறப்பிரிவாய் வேறுபடும். இவை ஆருயிர்கட்குக் கருவியாய் அவற்றுடன் பொருந்தியிருக்கும். மாயையை உணர்வுமெய்யாகவும், மாமாயையை உணர்த்துமெய்யாகவும், ஆன்மாவை உடன்மெய்யாகவும் கொள்க. ஆன்மாவை இரட்டுறமொழிந்து உடன் மெய்யாகவும் உயிராகவும் கொள்க. இத் திருப்பாட்டுத் திருமுறைவழி நிகழும் சிவதீக்கைக்கண் மும்முறை நீர் பருகும்போது ஓதுதல்வேண்டும். மும்முறையும் ஓதவேண்டிய தொடர். 'போற்றிநா லாறுண்மை, போற்றிஏழ் மெய்யன்பு, போற்றிஐந் தாம்அறிவு போற்று.' என்பதாம். இத்தொடரை வருமாறு ஓதலும் ஒன்று 'போற்றிநா லாறுடல் போற்றிஏழ் மெய்யுணர்வு, போற்றிஐந் தாமுணர்த்தல் போற்று.' மெய் - தத்துவம். (அ. சி.) அறு நான்கு - ஆன்ம தத்துவங்கள் இருபத்திநாலு. உறும் ஏழு - வித்தியா தத்துவம் ஏழு. உடன் ஐந்து - சிவ தத்துவங்கள் ஐந்து. கண்டத்தால் - பகுதிகளால். (42) 2229. மாயைகைத் தாயாக மாமாயை யீன்றிட ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏயும் உயிர்கே வலசகலத் தெய்தி ஆய்தரு சுத்தமுந் தான்வந் 2தடையுமே.
(பாடம்) 1. அறுநான்கு சுத்தம். 2. கேவல. சிவஞானசித்தியார், 4. 3 - 6.
|