அனைத்துலகினுக்கும் அனைத்துயிர்கட்கும் அரும்பெறற் றலைவனாவன். அவனை அகனமர்ந்த அன்பினராய்ப் படர்ந்து பரவிப் பணிந்து நினைமின்கள். படர்ந்து - நினைந்து. அவனே மெய்க்கடவுள். தத்துவம் - மெய். பிறப்பு ஆணவமலத்தேய்வின் பொருட்டு நல்கியருளப்பட்ட பெருங்கொடை. அப் பிறப்பின் விலையே வினையாகும். விலையில்லை எனவே வினையில்லை. வினையின் விளைவாம் பிறப்பும் இல்லை என்பது தாமே போதரும். விண்ணவரனைவர்களாலும் 'ஊற லாயரு ளா' யென்று உரைக்கப்பட்டு ஓவாது வழிபடப்பெறும் பெரும் பொருளும் சிவனே. நரை - வெண்மையாகிய வெள்ளறிவெனப்படும் அறியாமையில்லை. இந்நிலைக்கண் உம்மைவிட்டு என்றும் பிரிப்பின்றி நிற்கும் சிவபெருமான் உமக்குள் வேறறநின்று வெளிப்பட்டருள்வன். வேறறநிற்றல் - ஏகமாய் நிற்றல் மூன்று கலையென்பதற்குத் தந்திரம், மந்திரம், செவியறிவுறூஉ எனலும் ஒன்று. (அ. சி.) கலை ஒரு மூன்றும் - இடகலை, பிங்கலை, சுழுமுனை. விலை இல்லை - பிறக்கும் வினை இல்லை. உரைப்பன் - துதிக்கப்படுவான். நரையில்லை - சிறப்பில்லை. (29) 2969. படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச் செடியார் தவத்தினிற் செய்தொழில் நீக்கி அடியேனை உய்யவைத் தன்புகொண் 1டானே. (ப. இ.) படைப்போன் ஆருயிர்களைப் பூமிக்கண் பிறக்குமாறு படைத்தற்றொழிலைப் புரிவதற்கு அவ்வுயிர்கள் செய்யும் இருவினையே காரணமாகும். அவ்வினை எஞ்சுவினை எனப்படும். அதுவே ஈண்டுப் பாசம் எனக் குறிக்கப்பட்டது. அப் பாசத்தை அறுத்தருளியவன் சிவன். நெடியானாகிய காப்போன் செய்யும் இழிவு குறுமை எனப்படும். அதற்குரிய வாயில் நேசம். அதுவே ஏறுவினை எனப்படும். அவ் ஏறு வினையையும் சிவபெருமானே (2932) அறுத்தருளினன். நன்னெறிநான்மை (2615) நற்றவப் பேரொளி செடி எனப்படும். அத்தகைய பெருந்தவத்தால் ஊழ் வினையுந்த உஞற்றும் தொழிலினையும் ஒழித்தருளினன். இவ்வாற்றால் அடியேன் அன்பினைக் கைக்கொண்டருளி உய்யவைத்தனன். சிவமாகச் செய்தருளித் திருவடிப்பேரின்பில் திளைப்பித்தருளினன். (அ. சி.) படிகால் - பிறக்குமாறு. பாசம் - சஞ்சிதம். நெடியான் - மால். குறுமை செய் - இழிவைச் செய்வதற்கு ஏதுவாகிய. நேசம் - ஆகாமியம். செடியார் தவம் - கடுந்தவம். செய்தொழில் - பிராரத்துவத்தின் வன்மையை. (30) 2970. ஈசனென் றெட்டுத் திசையும் இயங்கின ஓசையி னின்றெழு சத்தம் உலப்பிலி தேசமொன் றாங்கே செழுங்கண்டம் ஒன்பதும் வாச மலர்போல் மருவிநின் றானன்றே.
1. கல்லாத. 8. கண்டபத்து, 4. " உள்ளதே. சிவஞானபோதம், 2. 2 - 1.
|