127
 

289. மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்பது அரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரு மாவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.

(ப. இ.) மாநந்தி ஓதும் பொருள் நூலை ஆராய்ந்து கேளுங்கள். கேட்பின் அரனார் திருவாணையாலே மாயன் பணிகேட்டு ஒழுகுவதும் விளங்கும். அதுபோல் அயன்பணி கேட்பதும் விளங்கும். சிவன் பணியாகிய திருவடி வழிபாடு புரியும் முறையினைக் கேட்பவர் சிவவுலகக் கடவுளராவர். அதுவே பிறவிப் பெரும்பயன் எய்தும் திருப்பணி கேட்பதாகும். அக் கேள்வியே திருவடிப் பெரும்பேற்றுப் பற்றுமாகும். மயன்: மாயன் என்பதன் குறுக்கம். சிவன்பணி - சிவபூசை. பயன் பணி - திருவடிப் பேற்றினுக்குரிய நானெறித் தொண்டு. நானெறி : சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பன.

(அ. சி.) மயன் - மாயன். அயன் - பிரமா.

(3)

290. பெருமான் இவனென்று பேசி யிருக்குந்
திருமா னிடர்பின்னைத் தேவரு மாவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்1 தெங்கள் ஆதிப் பிரானே.

(ப. இ.) முழுமுதற் சிவபெருமானே அழிவில் விழுப்பொருள் என்று தெளிவர். தெளிந்து வழி வழியாகப் புகழ்ந்து பேசுவர். அவரே நன்னெறியிலொழுகும் திருமுறைத்தொண்டர். திருமானிடர் எனச் சிறப்பித்துக் கூறப்படுபவரும் அவரே. இத் திருத்தொண்டின் பயனால் உம்மைக்கண் சிவவுலகக் கடவுளருமாவர். இருவினைஒப்பில் இறப்பில் தவமாம் நற்றவமுடையவர் அருமாதவராவர். அவ்வருமாதவத்தைப் புரியுமாறு உடனின்று உதவியருளுபவன் சிவன். அருமாதவப்படிமை கொண்டுணர்த்துபவன் அம்மையப்பனாகிய சிவன். மகிழ்ந்தருள் செய்வானும் அவனே. அருமாதவம்: நற்றவம்; சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பன.

(4)

291. ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்2
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்த3 மன்னிநின் றானே.

(ப. இ.) சிவபெருமானின் திருவருளையும் அவன் திருவாணையால் ஆருயிர்களின் இருவினைக்கீடாக வரும் இறப்பையும் பிறப்பையும் செம் பொருட்டுணிவினர் செப்புவர். அதுவே எப்போதுமுள்ள முப்பொருளுண்மை. இதனைத் திருவருளால் இடையறாது பேசி இருங்கள். அப்


1. கண்ணி. புறம். கடவுள் வாழ்த்து.

2. அவையே. சிவஞானபோதம், 2.

3. உற்ற 8. அதிசயப்பத்து, 10.