222
 

489. ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவ பெரும்பிழை யென்றுகொ ளீரே.

(ப. இ.) யோகவுறுப்பாகிய இயம நியமங்களே செந்நெறியினைச் சார்வதற்குரியன என்று அறிந்து அன்புடன் அவற்றைக் கைக்கொண்டார்க்கே ஈவது தக்கது ஆகும். யோகம் - மணவொருக்கும்; அணைவு. இயமம் - தீமையகற்றல். நியமம் - நன்மை ஆற்றல். அன்றி ...னீரே - இவ்வுண்மை அறிந்து அன்புகொண்டு அவற்றை மேற்கொள்ளாதவர் கட்குக் கொடுப்பது பெருங்குற்றமாகும்.

(2)

490. ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தரல்தந்து கற்பிப்போன்
போமா நரகிற் புகான்போதங் கற்கவே.

(ப. இ.) பஞ்சபாதகன் - பொய், கொலை, களவு, காமம், பொருள் நசை ஆகிய ஐந்து பாவமும் அஞ்சாது நெஞ்சாரச் செய்தவன். தோமாறும் - ஆணவமலக் குற்றத்தை மாற்றும். குரவன் - ஆசான். காமாதி - காமம் வெகுளி மயக்கம். விட்டோர் - தவத்தோர். தரல் - தர வேண்டிய நற்பொருள்கள். தந்து - அன்புடன் அளித்து. கற்பிப்போன் - தன்னையும் பிறரையும் அவ்வழி நிறுத்துவோன். போதம் - திருவடியுணர்வு. கற்க - ஏற்றுக்கொள்ள. (நற்சார்பில் வந்து தோன்றுவன்.)

(3)

491. மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி யிறைஞ்சாதார்க் கீந்து இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.

(ப. இ.) உண்மை உணர்வுடன் இரவலர் இறைவர் திருவடியைத் தொழாராயின் அவர்க்கு: ஈந்தவர்-கொடுத்தவர். (அதுபோல் புரவலரும் தொழா அராயின்) மண்மலை ...மீயினும் - மண்ணும் மலையும் போல் பரப்பும் செறிவும் உயர்வுமாகிய பெரும் பொருள் தந்தாலும். (ஏற்போர்) இருவரும்...குழியிலே - ஈந்தவர் ஏற்றவர் ஆகிய இருவரும் கடு நரகக் குழிவீழ்வர். (ஏற்போர் என ஒரு சொல் வருவிக்க) எனவே, இரவலரும் புரவலரும் இறைவணக்கமுடையராய்த் தங்களை ஆண்டவனுக்கு அடிமை என்றும் தங்கள்பாலுள்ள அறிவு செல்வங்களை அவன் உடைமை என்றும் அருளால் உளங்கொண்டு ஒருவருக்கொருவர் ஈந்தும் ஏற்றும் உதவியாய் வாழ்வதே திருநெறி என்பது பெறப்படும்.

(4)