(ப. இ.) ஒப்பில்லாத திருவைந்தெழுத்து மந்திரத்தைச் செவியறிவுறுத்திய மிக்க தவத்தையுடைய சிவகுருவைச் சிந்தை நோவும்படி தீமை செய்தவர்கள் வருந்தியலையும் நாயாகப் பிறப்பர். அளவில்லாத பிறப்புப் புலையராய்ப் பிறப்பார்கள். நூறு - அளலில்லாமை. நுந்திய பசி தூண்டுதலால் வருந்தியலைகின்ற: (இழிவென்று ஒதுக்கப்பட்ட). (4) 517. ஈச னடியார் இதயங் கலங்கிடத் தேசமும் நாடுஞ் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும் நாசம தாகுமே நந்நந்தி யாணையே. (ப. இ.) சிவபெருமான் ஒருவனே ஈசன் எனத் தக்கான். நூல் வழக்கல்லாமல் உலக வழக்கிலும் ஈசன் கோவில் என்பது சிவபெருமான் திருக்கோலிலையே குறிக்கின்றது. சிவபெருமானின் அடியார் உள்ளம் கலங்கும்படி செய்யும் தீயோர் ஒருவர் உளராயினும் அத் தேசம் பாழாகும். அந் நாடும் பாழாகும். பல நாடுகள் கொண்டது நகரம். பல கண்டங்கள் கொண்டது உலகம். பல உலகங்கள் கொண்டது அண்டம். பல அண்டங்கள் கொண்டது புவனம். இந்திரன் நிலையும் கெடும். ஏனைப் பெருமன்னர் நிலையும் கெடும். இது நம் நந்தி ஆணை. (5) 518. சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய்வரின் நன்மார்க்க முங்குன்றி ஞானமுந் தங்காது தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப் பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே. (ப. இ.) செந்நெறிச் சிவகுருவினிடமிருந்து பொய் வருமானால் நன்னெறியும் கெடும்; மெய்யுணர்வும் தங்காது. பழைமை தொட்டு வருகின்ற செந்தமிழ்த் துறையாகிய ஆகமமும் மறைந்தொழியும். செந்தமிழ் நெறியாகிய வேதமும் கெடும். பஞ்சமும் உண்டாம். சந்நிதி - திருமுன். (6) 519. கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும் கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக் கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞா னிக்கொப்பே. (ப. இ.) தன் கையகத்து அருமையாகக் கிடைக்கப்பட்ட விலை வரம்பில்லாப் பெருமணி யொன்றை அறியாமையால் கீழே புறக்கணித்துப் போகட்டுவிட்டு எல்லாரும் உண்மையாகவே விலைமதிப்பில்லாப் பயனில்லாக் கல்லென்று இகழவும் நாணமின்றி அக்கல்லைச் சுமப்பவன் விதி போன்றும், மேலும் கையகத்துக் கிடைத்த நெய் பால் தயிர் இவற்றை யுண்ணாது கடுவனைய கசப்பினை யுண்ணுமவன் கன்மம் போன்றும் ஆவர், 'பசித்துண்டு பின்னும் பசிப்பானை யொக்கும் இசைத்து வருவினையை' இயற்றும் கன்மிகள். 'இசைத்த, இருவினை யொப்பில் இறப்பில் தவத்தான், மருவும் ஞானி'கள் மாமணியினைச் சுமப்பாராவர். (7)
|