586. மணிகடல் யானை வார்குழல் மேகம் அணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ் தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே1. (ப. இ.) அகத்தவத்தால் உள்ளெழும் தெள்ளிய பண்ணார் இன்னோசை பத்தென்ப. அவை: மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் என்பன. இப் பத்தினையும் ஒத்த ஓசை அகத்தே பயிலப்பெறும். அகத்தவத்தால் சிவனைப் பணிந்தவர்க்கே இவ்வோசை உண்டாகும். இதுவே திருச்சிலம்போசை என்ப. ஏனையார்க்கு இவை காண்டல் இல்லை என்க. வளை - சங்கு. தணிந்து - ஒத்து. தும்பி - ஆண்வண்டு. நாதம் - ஓசை. பணிந்தவர் - இறைபணி நிற்பவர். அல்லது - அல்லாமல். பார்க்கவொண்ணாது - திருவடியுணர்வு கிட்டவொண்ணாது. (9) 587. கடலொடு மேகம் களிறொடும் ஓசை அடவெழும் வீணை அண்டரண் டத்துச் சுடர்மன்னு வேணு சுரிசங்கின் ஓசை திடமறி யோகிக்கல் லாற்றெரி யாவே. (ப. இ.) அண்டரண்டமாகிய அருட்பெரும்வெளியில் என்றும் பொன்றாது நின்று நிலவும் அறிவுப்பேரொளி சிவபெருமான். அவன் திருவருளால் அகத்தவம் கைவந்த யோகிகளுக்கே. கடல், யானை, புல்லாங்குழல், சங்கு இவையொத்த ஓசை உணர்வினில் உண்டாகும். அண்டரண்டத்து - பெருவெளியில். சுடர்மன்னு (மன்னுசுடர்) என்றும் நிலைபெற்றுள்ள சிவம். சுரிசங்கு - சுழிந்துள்ள சங்கு. (10) 588. ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் பாசம் இறங்கப் பரிந்துயி ராய்நிற்கும் ஓசை யதன்மணம் போல விடுவதோர் ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே. (ப. இ.) உலகவிரிவும் இயக்கமும் ஓசையால் ஆவன. உலகம் ஆணவமலத் தேய்வின்பொருட்டு ஆண்டவனால் முதற்காரணமாகிய மாயையினின்று படைக்கப்பட்டது. இவ்வுண்மை உணரவல்லார் ஆண்டவனை உணரவல்லாராவர். ஈசன் - சிவபெருமான். இமையவரீட்டமும் உயிரினங்களே. (அ. சி.) பாசமிறங்க - பாசம் கெட. (11) 589. நாத முடிவிலே நல்லாள் இருப்பது நாத முடிவில்நல் யோகம் இருப்பது நாத முடிவிலே நாட்டம் இருப்பது நாத முடிவில்நஞ் சுண்ட கண்டேனே.
1. திருச்சிலம். திருவுந்தியார், 17. " தம்பி. 12. சேரமான், 57.
|