659
 

ஏழாம் தந்திரம்
[காலோத்தராகமம்]
1. ஆறாதாரம்

1676. நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறுங்
கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலங்கண் டாங்கே முடிந்து முதல்இரண்டுங்
காலங்கண் டானடி காணலு மாமே.

(ப. இ.) அகநிலைகள் ஆறும் வருமாறு: நான்கிதழுள்ள மூலமும், ஆறிதழுள்ள கொப்பூழும், பத்து இதழுள்ள மேல்வயிறும், பன்னிரண்டிதழுள்ள நெஞ்சமும், பதினாறு இதழுள்ள மிடறும், இரண்டு இதழ் உள்ள புருவ நடுவும் ஆகிய ஆறிடங்களும் ஆறு ஆதாரஙகள் எனப்படும். இவற்றிற்குரிய எழுத்துக்கள் அராய்ந்து அமைக்கபெறும். இந் நிலைக் களங்களின் நினைந்து வழிபடக் காலத்தைத் தோற்றுவித்துத் தொழிற்படுத்தும் சிவபெருமானின் திருவடி காணலாகும்.

(அ. சி.) நாலும் - நான்கு இதழ்கள் உள்ள மூலாதாரம். இரு மூன்றும் - ஆறு இதழ்கள் உள்ள சுவாதிட்டானம். ஈரைந்தும் - பத்து இதழ்கள் எள்ள மணிபூரகம். ஈராறும் - பன்னிரண்டு இதழ்கள் உள்ள அனாகதம். பதினாறும் - பதினாறு இதழ்கள் உள்ள விசுத்தி. இரண்டும் - இரண்டு இதாழ்கள் உள்ள ஆஞ்ஞை. காலங்கண்டான் கால தத்துவத்தையே உண்டாக்கியவன் குறிகள் - அக்கரங்கள்.

(1)

1677. ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாதாந்த மீதாம் பராசத்தி
போதா லயத்த விகாரந் தனிற்போத
மேதாதி யாதார மீதான உண்மையே.1

(ப. இ.) ஓசை மெய்யாகிய நாத தத்துவத்தின்கண் பன்னிரு கலைகளோடு கூடியது சூரியமண்டலம்; பதினாறு கலைகளோடு கூடியது திங்கள் மண்டலம். நிலமுதல் நாதம் ஈறாகச் சொல்லப்பட்ட முப்பத்தாறு மெய்களுக்கும் மேலாகப் பேராற்றலாகிய திருவருளம்மை வீற்றிருந்தருள்வள். இயற்கையுணர்வின் இருப்பிடமாகிய தனிமுதற் சிவன் அதற்குமேல் காணப்படுவன். இவற்றிற்கெல்லாம் சார்பு நிலைக்களமாக வுள்ளதும் அச் சிவனேயாவன்.

(அ. சி.) ஈராறு நாதத்தில் - நாத தத்துவததில் பன்னிரு கலைகள் (சூரிய மண்டலம்). ஈரெட்டா மந்தத்தில் - சந்திர மண்டலத்தில் பதினாறு கலைகள். மேதாதி - பிருதிவி முதலாக. போதாலயம். ஞானாலயம. அவிகாரம் - அருவமாகிய சிவன். மீதானம் - நிராதாரத்துக்கு


1. மண்முதல். சிவஞானபோதம், 9. 3 - 3.