92
 

அதனை நம்முடைய நிழல் என்பதைவிட அழிவிலா ஒளிவழித் தடையென்பதே அமைவுடைத்து. அதுபோல் செல்வமும் நம்முடைய கையில் இருப்பதால் நம்முடைய தென்று கூறுகின்றோம். உண்மை யான் நோக்கின் அது சிவனுடையதே. இவ்வுண்மை கண்டும் தம்முடைய தென்று அறிவிலார் பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். உன்னுதலாகிய கருத்துக்குப் புலனாகும் உயிர் காலம் வந்தால் நீங்கிப் போகும். அது வரையும் உடல் உம்மிடமுள்ளது. பின்பு உம்மை விட்டு அகல்கின்றது. இவ்வுண்மையினை அகக் கண்ணாகிய அருளொளி கொண்டு கண்டு கொள்ளுங்கள்.

(3)

215. ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஒட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்1
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.

(ப. இ.) தேன்ஈ ஆனது பூவின் மணத்தினை இயற்கையாகக் கண்டு போய்த் தேனினைச் சிறிது சிறிதாக எடுத்துக் கூட்டி ஒரு மரக்கொம்பிற் கொண்டு சேர்க்கும். அவ் ஈக்கள் மனமாரப் பிறர்க்குக் கொடுக்காமையால் உடல்வலி யொன்றே யுடையார் அவ் ஈக்களைப் பலவகைச் சூழ்ச்சிகளான் விரட்டி விட்டுத் தங்கள் உடைமை போல் எடுத்துக்கொள்வர். அந்த ஈக்கள் அரும்பாடுபட்டு அணு அணுவாகச் சேர்த்த தேனைப் பிறர் கொள்ள வைத்திருந்தது போன்று ஆருயிர்களும் அரும்பாடுபட்டு வளர்த்த உடம்பினையும் தொகுத்த உடைமையினையும் நல்வழிப்படுத்தாது வாளா வைத்திருந்தன. அவ் வுயிர்களின் நோக்கம் தாமே பயன் பெறவேண்டுமென்பது. ஆனால் காலன் அவ்வுயிர்களின் எண்ணத்துக்கு மாறாக அவ்வுடலினின்றும் உயிரினைப் பிரித்துக் கொண்டு செல்கின்றனன். அவ்வுயிர்கள் உடம்பினையும் உடைமையினையும் காட்டிக் கொடுத்து நீங்குகின்றன. இரதமுங் கூட்டி என்பதற்கு தேன்ஈக்களின் வாயிலுள்ள உமிழ் நீரும் கூட்டி எனக் கூறலும் ஒன்று. தேன் - தேனீ. இரதம் - தேன்.

(4)

216. தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே.

(ப. இ.) திருவடியுணர்வு கைவந்த நல்லோர் செல்வத்தின் உண்மையினைத் தெளிவிக்கத் தெளிந்து கொள்ளுங்கள். தெளிந்தபின் ஐயுற்றுக் கலங்காதீர்கள். 'செல்வம் ஆறிடும் மேடும் மடுவும் போலாம்' தன்மைத்து. அதனால் அச்செல்வத்தின்மாட்டுக் கலக்கங்கொண்டு மலங்குதல் வேண்டா. அச் செல்வத்தின்மாட்டு வைத்துள்ள கடும்பற்றினை மாற்றிக் களையுங்கள். அவ்வாறு களைந்து கொண்டால் கூற்றுவன் வருங்கால் செல்வப் பற்றின்றி அச் செல்வத்தினின்றும் நீங்கி மேனிலை எய்துதலும் கூடும். குதித்தல் - விட்டு நீங்கல்; பற்றறல்.

(5)


1. அன்பொரீஇத். திருக்குறள், 1009.