1039
 

(ப. இ.) பளிங்கின் நிழலும் உடல் நிழலும் பிற நிழலும் உச்சிக் காலத்துக் கதிர்ச் சாய்வு இன்மையால் புறத்துப் புலனாவதில்லை. ஆனால் கதிரும் உருவும் கலந்தொன்றாய் விடுகின்றது. அதுபோல் ஆருயிரும் பிறவாநிலை எய்தும் பெற்றிவாய்ந்தபொழுது திருவருளில் கலந்துவிடும். இம்முறையினைச் சாயாபுருடன் அழிகின்றது போல் என அருளினர். வானவெளியை உற்று உற்று ஒரு மனத்துடன் நோக்குவார்க்கு முதற்கண் நிழலுருவம் தோன்றிப் பின் பயிற்சி மிகுதியால் தன்னிற் கரைந்து கலந்துவிடுமெனக் கூறுவாருமுளர். நீரில் தோன்றி நீரில் கழியும் நீர்க்குமிழிபோன்று இவ்வுடலும் அண்டத்தமைந்துள்ள மெய்யாகிய தத்துவங்களின் இனமாய்த் தோன்றுவதால் அவ்வம்மெய்கள் அவ்வம் மெய்களில் அடைந்துவிடும். அடையவே அதனகத்துத் தங்கியிருந்த வுயிர் என்றும் புகலிடமாகவுள்ள திருவருளில் கலந்துவிடும். கருப்பூரம் கொளுத்தப்பட்டு எரியுங்கால் பற்றுக்கோடுள்ள பருப்பொருளாகத் தோன்றுகின்றது. எண்ணெயும் திரியும் கலந்த திருவிளக்கில் திரி பற்றுக்கோடாக எண்ணெய் அதன் சார்பாக எரிகின்றது. அதனால் திரியின் எச்சம் தென்படுகின்றது. ஆனால் அவ்வெண்ணெயே தனிச் சார்பாக எரியுமானால் எச்சம் காணப்படாமை போன்று கருப்பூர தீபமுமாகும். அதுபோல் உடம்பும் திருவருளால் நுண்தண்மை எய்தி நுண்மெய்க்கண் அடங்கும். அடங்கவே ஆருயிர் திருவருளில் அடங்கிவிடும். இம்மூவகை ஒப்புக்களாலும் திருவருளால் உடல் நுண்மயமாய்ப் பிரிந்து நுண்மெய்க்கண் அடங்குவதும் ஆருயிர் திருவருளில் கலப்பதும் இங்கு ஓதியருளப் பெற்றன. ஒருபுடையொபபாக முறையே ஆளுடைய அரசர், ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அடிகளார் முதலாயினார் அருட் கலப்பினைக் கூறுதல் அமையும்.

(அ. சி.) சாயா - நிழல். போமப்பரத்தே - சிவத்திற் கலக்கும்.

(1)

2543. உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற்
படருஞ் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக்
கடையுந் தலையுங் கரக்குஞ் 1சிவத்தே.

(ப. இ.) திருவருளால் உடலும் ஆருயிரும் நீக்கமற ஒன்றியிருந்தன. அதற்குக் காரணம் அவ்வுயிர் சிறப்பாகிய செம்பொருட் சிவபெருமான் திருவடியிணையினை அடையும் நன்மையேயாம். தேனும் இன்னமுதும் தேக்கிலைக் கல்லையில் ஒழிவறநிற்பது வானும் விழையும் மானுடர் பருகுவதற்கேயாம். அவை பருகப்பட்டபின் அக் கல்லைகள் மண்ணொடுமாய்ந்து மறைந்துபோம். அதுபோல் உடம்பகத்துள்ள ஆருயிரும் சிவத்தினையடைந்ததும் அவ்வுடம்பும் நுண்மெய்யுடன் கரைந்துகலக்கும். கலக்கவே அவ்வுயிர்க்குச் சிவமும் சிவசத்தியாகிய சிவையும் புகலிட மெய்யாகும். ஆருயிர் எங்குமாய்ப் பரம்பும் இயல்பிற்று. அஃது உடம்பகத்து வினைக்கீடாகப் புகுந்து ஒருவழிப்பட்டு அமைந்து நின்றது. ஆற்றுநீர் அருவிவீழ்மலைதொட்டுப் பெருகுநீர் அலைவரைப் பரம்பிநிற்கும் தன்மை வாய்ந்தது அணையுயர்த்திச் சிறை செய்யப்படுமானால் அந்நீர் கட்டுப்பட்டு ஒரு வழிப்படுவதைக் காண்கின்றோமன்றோ?


1. அன்போடியைந்த. திருக்குறள், 73.

" சிறைசெய்ய. சிவஞானபோதம், 8. 4 - 1