(ப. இ.) அரியனவாகிய செங்கழுநீர் மலரின்கண் சொரூபமாகிய மணமும், உருவமாகிய வடிவழகும், குணமாகிய மென்மையும் பண்டே நிறைந்துள்ளன. அவற்றுடன் அரியனவாகிய தூய்மையும் சேர நான்காகும். அதுபோன்று பொருந்திய சிவம், ஆற்றல், அருள்,. ஆருயிர் நான்கும் கலந்த பேருயிர் வடிவம் சிவகுரவன் ஆவன். அச் சிவகுருவின்பால் பேரின்பப் பெருந்தோற்றம் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு பொலியும். பொலியும் - மிக்கு விளங்கும். சொரூபம் - இயற்கை உண்மைத் தன்மை. (அ. சி.) சத்தியாதி நான்கு - சத்தி, சிவன், பரம், சீவன். மதித்த - கலந்த. (9) 2800. உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தன் கரையற்ற சத்தியாதி காணில் அகார மருவுற் றுகார மகாரம தாக உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே. (ப. இ.) சொல்லொணாப் (2915) பேரின்ப மோன உண்மை வடிவினன் சிவகுரவன். அவன்பால் எல்லையில்லாத அருட் பண்புகள் சேர் சத்தி முதலியவற்றைத் திருவருளால் காணுங்கால், இயற்கை ஒலியாகிய அகரமும், அவற்றொடு கூடும் உகரமகரங்களும் ஆகித் தோன்றும். அத் தோற்றமே ஒமொழி மறையாகும். அம் மறையின்கண் அறிவுப் பேரொளியாய் உள்ளொளியாய் விளங்குவது திருவருளாகும். (அ. சி.) தாரம் - பிரணவம். (10) 2801. தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து கலைநின்ற கள்வனிற் கண்டுகொண் 1டேனே. (ப. இ.) முதன்மையும், சிறப்பும், மூவா மேன்மையும் உடைத்தாய் ஓங்கி யுயர்ந்து தலையாக நின்ற திருவருள் தாழும் திருமலை திருக்கயிலை. தாழ்தல் - தங்குதல். அத் திருக்கயிலையின்கண் ஒப்புயர்வில்லா ஒரு பெரும் நற்றவம் புரிபவள் உலகறி அன்னை. அவளாலறியப்படும் வள்ளல் சிவபெருமான். அத் திருவருளால் அடியேனும் தூயதல்லாதவை நிறைந்துள்ள அழகின்மையும் குற்றமும் பொருந்திய பிறவியைக் கடந்துள்ளேன். அன்பின் பிணிப்பில் கள்வன்போல் கட்டுண்டு நின்ற அச்சிவபெருமானைத் திருவருளால் கண்டுகொண்டேன். (அ. சி.) தலைநின்ற தாழ்வரை-கயிலை (இது காச்சுமீரத்திலிருந்து பார்த்தால் கயிலைக் கொடுமுடி செங்குத்தாக இருப்பது தோன்றும்). முலைநின்ற மாது-வயதுவந்த உமை. (11)
1. குரும்பைமுலை. நம்பி, 7. 16 - 1. " அள்ளலைக். அப்பர், 4. 42 - 6. " வெள்ளிநீர்ச். " " 75 - 9. " தோடுடைய. சம்பந்தர், 1. 1 - 1.
|