1222
 

19. வரையுரை மாட்சி

2914. தான்வரை வற்றபி னாரை வரைவது
தானவ னானபி னாரை நினைவது
காமனை வென்றகண் ணாரை யுகப்பது
தூமொழி வாசகஞ் சொல்லுமின் 1நீரன்றே.

(ப. இ.) ஒருவன் ஒன்றிலும் பற்றில்லாமல் இருக்கவேண்டுமானால் பற்றற்றான் பற்றினைப் பற்றுதல்வேண்டும். நிலையிலா ஊசலில் இருப்பவன் நிலையாக நிற்கவேண்டுமானால் தரையில் நிற்றல்வேண்டும். இவ்வுண்மை மெய்கண்டார் அருளிய செந்தமிழ்ச் சிவஞானபோதத் தனி முழுமுதல் நூற்கண் "ஊசல் கயிறற்றால் தாய் தரையேயாந்துணையான்" எனவரும் ஏதுவான் உணர்க. தான் சிவபெருமானைப் பற்றியே ஏனைப் பற்றுக்களை விட்டமையால் பின்பு ஒன்றனையும் பற்றவேண்டுவது இன்று. அதனால் யாரை வரைவது என்று இயம்பினர். நிலத்தைப் பற்றிய பின்பே ஊர்தியை விலக்குவதும் நாடுக. அதுபோல் தான் திருவருளால் சிவனுடன்கூடிச் சிவனானபின் நினைப்பதற்கு ஒன்றும் இன்மையான் யாரை நினைப்பது என்றனர். ஒருவன் திருமந்திர ஏடு வாங்குவதன்முன் அதனை வாங்கவேண்டும் என்று பெருங்காதலொடு நினைப்பான். அதனை வாங்கிய பின்பு வாங்கவேண்டுமென்னும் நினைப்பு நீங்குவது இதற்கு ஒப்பாகும். ஆனால் பின் அவ்வேட்டினை ஓதியின்புறுவன். அதுபோல் திருவடியிணையினைச் சார்ந்த ஆருயிர்கள் அதனை மட்டும் அறிந்து, பற்றி, அழுந்தி இன்புறும். அதனால் திருவடிசேர்ந்த ஆருயிர்க்குச் செயல் இல்லையென்பது மெய்யுணராதார் சொல்லும் பொய்யுரை என்க. காமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றமும் நீங்கிய திருவடியுணர்வுக்கண் பெற்றாரை யுகப்பதும், அவர் பாடியருளிய திருநெறிய தமிழ்வாசகஞ் செப்புவதும் சிறப்பினுக்கு வாயில்களாகும். அதனைத் தெளிந்து கூறுவீராக. திருவடியுணர்வுக்கண்: திருவருட்கண்.

(அ. சி.) தான் - ஆன்மா. வரைவற்றபின் - பற்றுதல் அற்றபின். காமனை - மாதர் போகத்தை. வென்றகண் - வெற்றிகொண்ட அறிவினால்.

(19)

2915. உரையற்ற தொன்றை யுரைசெய்யு மூமர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை 2யோனே.

(ப. இ.) மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் சிவன். மாற்றம் - உரை. மறையோன் - நுண்ணியோன். சொல்லிறந்து நின்ற தொன்மைப்


1. நானவனென். சிவஞானபோதம், 10. 1 - 1.

" சிறைசெய்ய " 8. 4 - 1.

" உறுகயி. அப்பர், 4. 26 - 6.

" ஈசனைஎவ். அப்பர், 6. 98 - 8.

" கண்ணுதல். சிவஞானசித்தியார், 1. 2 - 25.

2. சாவமுன்னாள். 8. திருச்சதகம், 4.