ஒண்ணாது. என்னை, அவன் இல்லாதவிடம் இருந்தாலன்றோ, வினவுதலுண்டாகும் என்க. அவன் மெய்யன்பர்தம் அகக்கண்ணிற்கும் புறக்கண்ணிற்கும் பொங்கி விளங்கி அருள்கின்றனன். அவனே உலக முழுமுதல்வன். அவனே புண்ணிய வடிவினன். அவன் இரவின் கண்ணும் நின்றருள்கின்றனன். இது "நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்" என்பதனால் விளங்கும். நிலவுக்கதிர் சேர் திங்களாகவும் நின்றருள்கின்றனன். வெம்மைக் கதிர் சேர் செம்மை ஞாயிறாகவும் நின்றருள்கின்றனன். எங்கும் மழைபோல் பேரருள் பொழியும் பெரும் பொருளாகவும் நின்றருள்கின்றனன். அவனே எல்லாம் வல்ல இறைவனாவன். (அ. சி.) புவனாபதி - உலகநாயகன். கங்குல் - இரவு. மழைபோல் - மேகம்போல். (38) 2978. உணர்வது வாயுமே யுத்தம மாயும் உணர்வது நுண்ணறி வெம்பெரு மானைப் புணர்வது வாயும் புல்லிய தாயும் உணர்வுடல் அண்டமு மாகிநின் றானே. (ப. இ.) சிவபெருமான் ஆருயிர்கட்கு அறிவை விளக்குந் தன்மையில் அவ் வுயிர்களின் அறிவிற்கு அறிவாய் நிற்கின்றனன். ஆதலின் உணர்வதுவாயும் என்றனர். மேலும் இயற்கை யுணர்வு, முற்றுணர்வு முதலியன உடையனாதலின் சார்ந்தாரைக் காக்கும் தலைவனும் ஆகின்றனன். பொருள்களைத் திரிபின்றி யுணர்வது நுண்ணறிவாகும். எம்பெருமான் எல்லாவற்றுடனும் வேற்றுமையின்றிப் புணர்ந்து நிற்கின்றனன். அங்ஙனம் பின்னற்புணர்ப்பாய்ப் புணர்ந்து நிற்பினும் அவன்றன் அருட்கண்ணால் மட்டுமே அவனை உணர்தல் முடியும். ஆருயிர்களின் கண்ணாலும் கருத்தாலும் அறிய வொண்ணா நுண்மையன். இவ்வுண்மை 'நூலுணர்வு உணரா நுண்ணியோன் காண்க'. என்னும் செந்தமிழ் மறைமுடிவினால் உணரப்படும். உணர்வு உடல் உலகம் அண்டம் எல்லாமாய் நிறைந்து நின்று அருள்பவனும் அவனே. (அ. சி.) உணர்வதுவாய்-அறிவாய் நுண்ணறிவு - மெய்ப்பொருள் காணும் ஆராய்ச்சி அறிவு. புணர்வதுவாய் - எல்லாவற்றோடும் கூடியதாய். புல்லியதாய் - அறிதற்கு நுண்ணியதாய். (39) 2979. தன்வலி யாலுல கேழுந் தரித்தவன் தன்வலி யாலே அணுவினுந் தானொய்யன் தன்வலி யான்மலை எட்டினுந் தான்சாரான் தன்வலி யாலே தடங்கட 1லாகுமே. (ப. இ.) சிவபெருமான் தன்னுடைய முடிவிலாற்றலால் எழுவகை உலகங்களையும் தாங்குகின்றனன். தன் ஆற்றலாலேயே 'அணுவோர் அண்டமாம் சிறுமை கொள்' நுண்ணியனும் அவனே. 'அண்டமோர் அணுவாம் பெருமை கொள்' பரியனும் அவனே. தன் ஆற்றலாலேயே எண் பெரும் மலையும் ஒருங்கு கூடினும் ஒப்பாகாப் பெருமையுமுடையன். அவன்றன் பேராற்றலுக்கு அளப்பருங் கடலும் ஒப்பாகா என்க. (40)
1. அண்டமோ. 9. கருவூர்த்தேவர், 1.
|