183
 

வதற்குக் காரணமாய் அருளும் சிவனும் அவ்வுயிர்களுடன் உடனாய் நிற்பன். ஐந்தில் அமர்ந்து நின்றான் என்பதற்குத் திருவைந்தெழுத்திலமர்ந்து நின்றான் எனலுமொன்று.

(5)

403. உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே.1

(ப. இ.) மாயாகாரியமாகிய உலகனைத்தையும் முதற்காரணமாம் மாயையினின்றும் படைத்தருள்வன் சிவன். ஆயின் சிவபெருமான் வினை முதற் காரணன் என்பது குறிப்பெச்சம். ஆருயிர்களுக்கு வினைக்கீடாகப் பிறவியைப் பலவாறு படைத்தருள்பவனும் அவனே. 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்' என்பது ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாகவுள்ள உயிர்கள் என்னும் பாகுபாடு பருவுடலைப் பற்றியனவே ஆகும்; இந்நிலை எய்துவதற்கு முன் ஆண்டவன் படைத்தருளும் எட்டுறுப்புக்களோடு கூடிய நுண்ணுடம்பினையேயாம். நுண்ணுடம்பு மலத்தைப் பற்றிப் படைத்தளித்த யாவர்க்கும் ஒன்றுபோல் அமைந்த இயற்கைப் பிறப்புடம்பாகும். அதனாலும் அஃது எல்லாவுயிர்க்கும் ஒன்று போலமைந்த இயற்கையுடம்பாகும். சிறப்புடம்பு நால்வகைத் தோற்றத்து வினைக்கீடாக அமையும் உடம்புகளேயாம். அக் குறிப்புச் 'சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்பதனாற் பெறப்படும். ஈண்டுச் சிறப்பு: வினைக்கீடாகச் செய்யவேண்டிய தொழிலுக்கு வாய்ப்புடைய உடம்பு. இது செயற்கையுடம்பாகும். இவ்வுடம்புகள் இருவினைக்கீடாகப் பலவேறு வகையாகக் கொடுக்கப்படுகின்றன. அதற்கு ஒப்பு குயவன் சிறிய குடும்பம் பெரிய குடும்பம் முதலியவற்றுக்கு வேண்டும், சால் குடம் சிறு தூதை முதலியவற்றைப் படைத்துக் கொடுப்பதாகும். தூதை - சிறு முட்டி. சால் குடம் முதலியவற்றை உருவகமாக உடம்புகளுக்குக் கொள்க. இவற்றைப் படைத்தருளும் வல்லான் சிவபெருமான் ஒருவனே.

(6)

404. உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியாய் நிலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே.

(ப. இ.) உயிர்மூச்சாகவும், அம் மூச்சின் நிலைக்களமாகிய உடம்பாகவும் கலப்பு முறையில் நின்று நிறையும் பெருமை மிக்கவன் நந்தியாகிய சிவபெருமான். மலம் நீங்கிய உயிர் வெள்ளுயிர் என்ப்படும். அவ்வுயிர்க்கு இடம் கொடுத்தருளும் வெளியாய் நிற்பவனும் சிவனே. வெளி - திருவருள்வெளி. உயிருள் உணர்வாய் நிற்பவனும் சிவனே. உயிரை உடலாகக் கொண்டு வீற்றிருந்தருளும் விழுப்பொருளும் சிவனே. பரம் - விழுப்பொருள். தள்ளுண்ட உயிராக வண்ணம் தாங்கி நின்றவனும் சிவனே என்பதற்குத் தள்ளப்படும் உயிர் மேலாகும் வண்ணம் அவ்வுயிரினைத் தாங்கி நிற்பவனும் சிவனே என்றலும் ஒன்று.

(அ. சி.) தள்ளுயிர் - பல அண்டங்களிலும் செலுத்தப்படும் உயிர்.

(7)


1. காரிய, சிவஞானசித்தியார், 1. 1 - 18.