(ப. இ.) இயல்பாக உயிர்ப்புப் பதினாறுமாத்திரை ஓடிக்கொண்டிருக்கும். அவற்றுள் நான்கு அகமும், முந் நான்கு புறமுமாய் இருக்கும். இப் பன்னிரண்டும் அகமாய் அடங்கிவிட்டால் அஃது உயிர்ப்பின் (பிராணாயாமம்) பெறுபேறாகும். அப் பேறுபெற்றார் அளவில்லாத காலம் நீருள் மூழ்கி யிருந்தாலும் நிலத்தினுள் புதையுண்டிருந்தாலும் உடம்பழியாது வாழ்வர். இது முழுமுதற் சிவனார் அருளாணையாகும். (11) 703. ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும் நாசியின் மூன்றும் நாவில் இரண்டுந் தேசியும் தேசனுந் தன்னிற் பிரியுநாள் மாசறு சோதி வகுத்துவைத் தானே. (ப. இ.) இயல்பாகவே கட்டற்ற முழுமுதற் சிவம் மீண்டும் உலகைப் படைக்க வுன்னினன். அப்பொழுது தன் அருள்வெளியில் தங்கியுள்ள மாயையும் திருவருள் ஆற்றலும் வெளிப்போந்து தொழிற்படுவவாயின. இம் முறைகளை அவனே வகுத்து வைத்தனன். நாவில் இரண்டு - பேச்சுஞ் சுவையும். (அ. சி.) ஓசையில் 7 - சத்தம், பரிசம், உருவம், இரசம், கந்தம், சரித்தல், சேர்த்தல், ஒளியில் 5 - இரசம், உருவம், கந்தம், வெம்மை, தகித்தல். நாசியில் 3 - கந்தம், இடைகலை, பிங்கலை. தேசி - பிராணவாயு. தேனு - சந்தி. (12)
13. காயசித்தி உபாயம் 704. உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. (ப. இ.) நம் உடம்பு திருவடியுணர்வு பெறுதற்பொருட்டே தரப்பட்டது. அவ் வுடம்பை மெய்யுணர்வு வழியில் பழக்கி அத் திருவடியுணர்வினைப் பெறுதல் வேண்டும். அதனை வீணே அழியவிட்டால் உயிர் பயனடையாது. அது பாற்கலத்தைப் பாலைப் பருகுவதன்முன் அழியவிடுவதை ஒக்கும். அவ் வுடம்பை வளர்க்கும் வழிவகை திருவைந்தெழுத்தெண்ணல். அதனை இடையறாது கணித்துக் கொண்டிருப்பதே உடம்பை வளர்க்கும் உபாயம். அதனாலேயே உயிர் வளர்ச்சியுண்டாம். உயிர்வளர்ச்சி - மெய்யுணர்வு. உபாயம் - வழிவகை. உடம்பார் உயிரார் அவற்றின் சிறப்புநோக்கி உயர்திணை வாய்பாட்டால் கூறப்பட்டன. இஃது அஃறிணை உயர்திணையில் வந்த திணைவழுவமைதி. (1) 705. உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.
|