20. அமுரி தாரணை 825. உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க் கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும் உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில் நடலைப் படாதுயிர் நாடலு மாமே.1 (ப. இ.) உடலின்கண் காணப்படும் திருவருள் துணையால் ஊறும் சிவக்குடிநீர் ஒன்றுண்டு. அது கடல் அருகே தோன்றும் சிற்றூறல் போல் இனிப்புடையதாக இருக்கும். அவ் வூறலுள் ஏற்றமிட்டு இறைப்பது ஒப்ப உடலின்கண் ஒருவழியாகிய நெஞ்சத்திடத்துத் திருவடிமறவா நினைப்பாகிய சிவநீரை இறைத்தால் உடலுக்கு நடலையாகிய கலக்கம் ஏற்படாது. இஃது உயிர்க்குப் பெருங்காவலுமாகும். நாடல் - காத்தல். (அ. சி.) கடலிற் சிறுகிணறு - கடலுக்கருகிலுள்ள நன்னீர்க் கிணறு. உடலில் ஒருவழி - பிரமரந்திரம். நடலை - கலக்கம். (1) 826. தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில் ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும் களிதருங் காயங் கனகம தாமே. (ப. இ.) தெளிவைத் தருகின்ற இந்தச் சிவநீராகிய அமிழ்தைப் பருகினால் ஓராண்டுப் பயிற்சியில் சிவவொளி மேலோங்கும். உயிர்ப்பாகிய அகாரத்தில் மனமும் ஒடுங்கும். சிவஇன்பத்திற்குரிய இவ் வுடல் பொன்மேனியாகும். அமுரி சிறுநீருக்கும் பெயராகும். அதனால் அதனையுடைய உடலைக் கடல் என முற்பாட்டில் உருவகித்தார். கடல்நீர் மேகத்தால் மொண்டு உவர்நீக்கி நன்னீராவதுபோல் இவ் வுடம்பின்கண் உயிர்ப்புப் பயிற்சியால் மாறா இனிய சிவநீர் கடலருகே தோன்றும் சிற்றூறல் போன்றதெனவும் கூறப்பட்டது. இப் பாட்டில் அதன் நன்மை கூறப்படுகின்றது. எட்டு - அகரம்: இது தமிழெண். (அ. சி.) சிவநீர் - அமுரி, அமுத நீர். வளியுறு எட்டின் - எட்டின் குறியாகிய அகர உருவாகியவர் கலந்துள்ள (சீவப்) பிராணவாயு. (2) 827. நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர் மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள் தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின் மாறும் இதற்கு மறுமயி ராமே. (ப. இ.) நூறுமிளகு அளவு சிவத்தினீரைப் பருகுவார்க்கு உடல் முன்னிலையினும் சிறந்து பொன்மேனியாக மாறும். இதற்குமேற் சிறந்த சாவாமருந்து வேறொன்றும் இல்லை. மக்கள் இதனைத் தெளிந்து இச் சிவநீரை உச்சித்தொளைக்குக் கொண்டுசேர்ப்பின் உடல் ஒளியுடலாக மாறும். வெள்ளை நரைமயிரும் மிக்க கருமையாக மாறும் (சிவநீருடன்
1. விண்ணின்று. திருக்குறள், 13. " நடலை. அப்பர், 5. 90 - 4.
|