சென்னி கை வைக்க - தலையில் கை வைத்துச் செய்யும் தீக்கையைச் செய்ய. 1565. தாடந்த போதே தலைதந்த1 எம்மிறை வாடந்த ஞான வலியையுந் தந்திட்டு வீடந்த மின்றியே யாள்கென விட்டருட் பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே2 (ப. இ.) எம் தலைவனாகிய சிவபெருமான் தன் திருவடியிணையினை எம் உள்ளத்தே பதித்தபொழுதே, இதுகாறும் பொறிபுலன்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த எமக்கு அவைகள் அடிமைப்படும்படியான தலைமையையும் தந்தருளினன். அறியாமையை ஈரும் வாளாகிய திருவடியுணர்வினையும் தந்தருளினன்; முடிவுபேறில்லாத திருவடிப்பேற்றினையும் தந்தருளினன்; திருவருளால் தன் திருவடியை வெளிப்பட்டுச் சிவகுருவாய் எழுந்தருளி வந்து எம் முடிமேல் வைத்தருளினன். (அ. சி.) தாள் தந்த போதே - திருவடியை என் சென்னிமிசை சூட்டினபோதே. தலைதந்த - தலைமைத் தன்மை வந்தது. வாள் தந்த ஞான - வாள் போலும் அஞ்ஞானத்தை ஈரும் ஞான. வீடு அந்தமின்றியே ஆள்கென - முத்தி இன்பத்தை என்றும் நித்தியமாய் அனுபவி என்று அருட்பாடின் - அருளினால். முடி வைத்து - தலையில் திருவடியைச் சூட்டி. பார் வந்து - பூமியிலே குருவடிவாய் வந்து. (2) 1566. தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின ஏனைய முத்திரை யீந்தாண்ட நன்னந்தி தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே. (ப. இ.) திருவருளால் ஆருயிர் சிவமாகிச் சிவனதுண்மை யறிவின்ப நிலையினில் நிற்கும். அப்பொழுது மலமாயை கன்மம் மாயேயம் என்னும் நான்கினது இயல்புகளும் நீங்கின நிலையினை எய்தும். சிவன் திருவடிக்கு அடிமையாம் அடையாளப் பொறியினை நல்கி நல்ல நந்தியெங்கடவுள் ஆண்டனன். அச் சிவபெருமான் திருவடி சூட்டி ஆருயிர்களை அருள்வழி நிலைப்பித்தது மெய்ம்மையேயாகும். இது, நிலைப்பித்தல் திருவருளாகிய பிரதிட்டாகலையின் அருட்செய்கையாகும். இக் கலைகள் ஐவகை என்ப. அவை: நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் என்ப. சொரூபம் - இயற்கை. முத்திரை - பொறி. (3) 1567. உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத் திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக் கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.3
1. இந்திரிய. சிவஞானசித்தியார், 10. 2-1. 2. ஆவா. 8. திருத்தெள்ளேணம், 7. 3. கயல்மாண்ட. 8. திருத்தெள்ளேணம், 11.
|