94
 

தடையுமின்றிப் போகும் வழிகள் ஒன்பதுள்ளன. இறுதிக் காலத்து உடம்பினைப் பேணி வளர்த்துக் காப்பாற்றி நிலைப்பித்த தாய் தந்தை முதலிய உறவினர் சூழ்ந்து உயிரினை ஏதுஞ் செய்ய முடியாதபடி உடம்பினைக் காட்டிக் கொடுத்துக் கைவிட்டனர். வணங்கி - வளைந்து; சூழ்ந்து.

(அ. சி.) தறி - சுழுமுனை. போம்வழி - உயிர்போம் வழி. நாட்டிய - வளர்த்த.

(8)

220. உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்
சுடும்பரி சந்தையுஞ் சூழகி லாரே.1

(ப. இ.) உயிரானது உடம்பினை விட்டு நீங்கிக் கூற்றுவன் வாயிலாக மேற் செல்லும் போது அக் கூற்றுவனைத் தடுக்கத் கூடிய ஆற்றல் தவமோ தானமோ வேள்வியோ பிறவோ ஒன்றுக்கும் இல்லை. ஆனால் அண்ணலாகிய சிவபெருமான் திருவைந்தெழுத்தை நன்னெறி நான்மை நலந்தோன்ற 'நவசிவய, சிவயநம, சிவயசிவ, சிவசிவ' எனப்படிமுறை யான் நான்காகப் பகுத்துள்ளனர். இவற்றில் ஏதாவதொன்றைத் திருவருள் வலத்தால் கைக்கொண்டு ஒழுகினால் அது கூற்றுவனை வெல்லும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். அம் மறைவல்லார்பால் கூற்றுவன் தூதுவர் வர நினைக்கவும் அஞ்சுவர். சூழ்தல் - நினைத்தல். ஏனையார்பால் அத் தூதுவர் அஞ்சாது வந்து கைக்கொண்டு செல்லுவர். அவ்வுண்மை 'வெந்தூதுவரோ டிறப்பன்' என்னும் திருமுறையான் உணரலாம். இம்மைக்கண் செந்நெறிப் பயிற்சியிலாதார் சிவனை மறப்பினும் உம்மைக் கண் புக்கதும் கூற்றுத் தலைவனாம் நடுவன் அச்சிவனை நினைவுறுத்துவன். அது வருமாறு:

வெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன்வந்து
பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட - இற்றைக்கும்
இல்லையோ பாவி பிறவாமை யென்றெடுத்து
நல்லதோர் இன்சொல் நடுவாகச் - சொல்லியிவர்.

- போற்றிப்பஃறொடை: 81 - 4.

அண்ணலை - சிவனை. எண்ணும் - எண்ணச் செய்வன். இறப்பு சிவனை எண்ணச் செய்தற்கு ஒப்பு வருமாறு: பசி உணவினையும், நோய் மருந்தினையும், பருவம் தக்க உறையுளையும் நாடச் செய்வனவாம். உறையுள் - இல்லம், போர்வை, குடை முதலிய தற்காப்புக்கள். போற்றிப்பஃறொடை செந்தமிழ்ப் பொருள் நூல் பதினான்கனுள் ஒன்று. கடும் பரிசம் - மிகச் சிறந்த திருவடியுணர்வின் விளக்க ஊற்றுணர்வு.

(அ. சி.) அடும்பரிசு - வெல்லும் வகை. அண்ணலை ... லாரே - உயிர் போகும்போது சிவனை நினைந்தால் நமன் தூதுவர் நணுகமாட்டார்.

(9)


1. கண்டு, இன்னங். அப்பர், 5. 92 - 1, 9.