உண்மையால் மீளா அடிமையாய்க் கூடுதலுமாகும். கோலிங்கம் - சிறந்த அடையாளம். (அ. சி.) ஆலிங்கனம் செய்து - கலந்து. மெய்நெறி - சுத்த அத்துவிதம். கோலிங்கம் ஐஞ்சு - பஞ்ச லிங்கங்கள். (8) 366. வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள் ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர் ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத் தாள்கொடுத் தானடி சாரகி லாரே. (ப. இ.) தாம் வாழ்வான் வானவர்கள் முழுமுதற் சிவனைத் தொழுது போர் வெல்லும் வாளே சீரெனக் கொண்டு வேண்டினர். சிவபெருமானும் 'வேண்டுவார்க்கு வேண்டுவதே ஈயும்' பெருவள்ளலாதலின் அவ்வாறே வாள் கொடுத்தருளினன். அத் தேவர்கள் வாள் கொடுத்த வள்ளலை அந்த அளவில் நினைந்து வழிபட்டனர். அவர்கள் நம்மைப் போல் தம்மைச் சிவபெருமானுக்கு அடிமையாகக் கொடுத்து அவன் திருவருளால் அவன் திருவடியை உணர்கிலர். அந் நோக்கத்துடன் அவனை வழிபட்டால் அவன் ஆளாக வேண்டுமென்னும் நல்லெண்ணத்தை நம்பால் எழுப்பியருள்வன். அடிமையானதும் திருவடியின்பத்தைக் கொடுத்து வாழ்வித்தருள்வன். மேலும் நீங்காத் துணை வலியாக அத் திருவடியையே தந்தருள்வன். இத்தகைய சிவபெருமான் திருவடியைச் சாராது வாழ்நாட்களெல்லாம் வீழ்நாளாக்குவர் வானவர். வாள்கொடுத்து என்பதற்கு அறிவு கொடுத்து எனலும் ஒன்று. என்னை? நாளுடனே வாளும் நயந்து சிவனருளல், ஆளுளத்துத் தாளெழுப்பலாம் ஆதலின் என்க. ஆள் கொடுத்தல், அடிமையாம் எண்ணத்தை எழுப்பல். (அ. சி.) வாள் கொடுத்தான் - அறிவாகிய ஒளியைக் கொடுத்தான். ஆள் கொடுத்து - அடிமைப்பட்டு. கோளாக - வலிமை உண்டாக. (9) 367. ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு வாழி சதுமுகன் வந்து வெளிப்படும் வீழித் தலைநீர் விதித்தது தாவென ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே. (ப. இ.) பல்லூழி காலம் சிவபெருமானை நல்லறிவுடன் வழிபட்டு வலம் வந்து இடையறாது நாடினன். அங்ஙனம் நாடிய மெய்யன்பினனாகிய ஒருவனுக்குப் படைக்குந் தொழிலை மேற்கொண்டு அருளோன் மெய்க்கண் சிவபெருமான் நான்கு திருமுகங்களுடன் தோன்றியருளினன். அவன் ஆலம் விழுதொத்துக் காணப்படும் திருச்சடையின்கண் விளங்கும் திருவருளாகிய வான்புனலைத் தந்தருள வேண்டுமென்று விண்ணப்பித்தனன். எல்லாவொளிகளையும் வென்று பேரொளியாய்ப் பேரூழிக் கதிரவனாய் விளங்கும் சிவபெருமான் அவ்வாறே அருள்புரிந்தனன். அருளோன்மெய் - சதாசிவதத்துவம். தலைநீர் - தலையில் விளங்கும் அந்தண்மை வாய்ந்த திருவருள். (அ. சி.) சதுமுகன் - கர்த்திருசாதாக்கியத்திலுள்ள நான்கு முகங்களை உடைய சிவன். (10)
|