114
 

ஆர்வமுடையவர் சிவபெருமானை அருளால் காண்பர். அவ்வார்வ விளைவு ஈரமாகிய நண்பினைத் தரும். அத்தகைய நண்பினர் சிவபெருமான் இணையிலாத் திருவடியிணையினைக் காண்பர். உலகியற் பற்றால் குடும்பப் பாரமுடையவர் பிறப்பு இறப்புத் தடுமாற்றத்தைக் காண்பர். இவர்கள் எய்தும் கடும் துன்பத்தினை வாயினாலும் சொல்லொணா தென்க. மேலும் இருளுலகத் துன்பமும் எய்துவர். கோங்கு: மாறுபாடு எனக்கொண்டு அதனைத் திசைச்சொல் எனவுங் கூறுவர். அன்பு ஆர்வம் முதலியவற்றைக் கண்ணப்ப நாயனார் திருவரலாற்றிலே 'முன்பு செய்தவத்தி னீட்டம்' (103) எனவரும் திருப்பாட்டான் உணர்க. ஈரம் - உள்ளன்பு. நெருக்கு - துன்பம் சிவக்கொழுந்து - சிவலிங்கம்.

(அ. சி.) ஆர்வம் - அன்பிற்கு முதல். ஈரம் - இரக்கம். பாரம் - அன்பின்மை. கோரம் - துன்பம். கோங்கு - ஒருவித நரகம்.

(4)

261. என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியுந்
தன்னன் பெனக்கே தலைநின்ற வாறே.

(ப. இ.) பலவாகப் பேசிப் பயன் என்? உள்ளன்பு உருக்கிக் கள்ள மொழிந்து தெள்ளத் தெளியச் செந்தமிழ்த் திருமுறையால் சிவனை இடையறாது ஏத்துங்கள். எப்பற்றும் அற்று முதன்மையான அன்பால் முடிவிலா முழுமுதல்வனின் விழுமிய அடியிணையினைத் திருவருட் கண்ணால் ஒருவாது நாடுங்கள். அவ்வாறு ஒழுகினால் பின்னுதலாகிய புணர்ப்பன்பு எய்துதற் பொருட்டுப் பெருந் தகுதிப்பாடுடைய நந்தியெம் பெருமான் தன்னையே நாடும் தனியன்பினை நமக்கே அருள்வன். தந்தருளி நம்மாட்டுத் தலைமைச் சிறப்பாய் வெளிப்பட்டு நின்றருள்வன். என்: வினாவிடைச் சொல்லாய் ஏதும் பயனின்று என்பதை உணர்த்திற்று. முன் அன்பு - முதன்மையான பத்தி. தலைநின்ற ஆறு - தோன்றியமுறை.

(அ. சி.) என் - பல கூறிப் பயன் யாது. தலை நின்றவாறு - தோன்றிய விதம்.

(5)

262. தானொரு காலஞ்1 சயம்புவென் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்குந்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

(ப. இ.) சிவபெருமான் தன்னை அடியவர்க்கு அருளுதற் பொருட்டுத் திருவருளில் ஒரு காலத்துத் திருவுருக் கொள்ளுவன். அம்முறையில் தான் தோன்றியாகிய சயம்பு என்று பெறப்படுவன். அங்ஙனம் ஏத்துவார்க்குச் சிவவுலக வழித்துணையாய் அச் சிவன் என்றும் நின்றருள்வன். ஈண்டு ஒரு காலம் என்பது ஒப்பில்லாத எக்காலமும் என்பதாம். தேன் போலும் இனிய மொழியினையுடைய உமையம்மையாரை இடப்பால் கொண்ட கொன்றைமாலை அணிந்து விளங்குகின்ற சிவபெருமான்


1. பிணத்தினை. சிவஞான சித்தியார், 2. 4 - 24.