(ப. இ.) திருவருளால் காணவேண்டுமென்னும் அன்புடன் முயல்வார்கட்குச் சிவபெருமான் கண்ணுக்குள் மணிபோன்று உடனாகவிருந்து தன்னைக் காட்டிக் காண்பன். அதனால் அவன் கருமணி போன்றவனாவன். அவ் வழியாகக் காணும் பேறுடையார்க்கு அவன் கடல் போன்ற எல்லையில்லாத கோதிலா அமுதினை யொப்பான். கடல் உப்புத் தன்மை வாய்ந்ததே என்னுங் கருத்தால் திருப்பாற்கடல் என்னும் அடை புணர்த்திக் கூறுவாராயினர். ஆருயிரனைத்தையும் சிவபெருமான் தொடர்பு கொண்டு வேறுபாடின்றிப் பேண வல்லார்கட்கு அவன் அப்பொழுதே வெளிப்பட்டருள்வன். அம் முறையில் அவன் என்றும் தவிரான். அவன் திருப்பெயர் நந்தி. ஆணமாகிய அன்பு வல்லார்க்கு அச் சிவபெருமான் என்றும் துணையாவன். (அ. சி.) பிழைப்பிலன் - தவறுதல் இலன். ஆணவல்லார்க்கு - அன்புமிக்கார்கட்கு. (13) 2781. ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல் மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி ஆய்நின்ற தேவர் அகம்படி யாகுமே. (ப. இ.) ஒப்பில்லாத ஓமென்னும் ஒரு மொழிக்கண் காணப்படும் பிரிவில்லாத ஓசைபோல் விண்ணுறை தேவர்கள் விழையும் விழுப்பொருள் சிவபெருமானாவன். அவன் மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன். மறையோன் உயிருக்கு உயிராகிய நுண்பொருள் - காரண சிவன். அவன் எட்டா நிலைக்கண் உள்ளவன். அவன் செழுஞ்சுடராகவுள்ளவன். அவனே எம்பெருமான். அவன் திருவடியிணையினை ஆராய்ந்து அன்பு பூண்டு ஒழுகும் தேவர் பலராவர். அவர்தம் உள்ளத்துள் அச் சிவபெருமான் விளக்கமாய் நின்று வேண்டும் துணை புரிந்தருள்வன். அகம்படி - உள்ளத்துள். (அ. சி.) சேய்நின்ற - மனம், வாக்குகளுக்கு எட்டாமல் நின்ற. தேவர் அகம்படி - தேவர் மனத்தின் தன்மை. (14)
11. சத்திய ஞானானந்தம் (உண்மையறிவின்பம்) 2782. எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி முப்பாழுங் கீழுள முப்பாழும் முன்னியே இப்பாழும் இன்னவா றென்பதி லாவின்பத் தற்பர ஞானானந்தந் தானது வாமே. (ப. இ.) இன்ன நிலைமைத்தென்று எவராலும் கூறவொண்ணாததனைப் பாழ் என்பர். அப்பாழ் மாயைத் தொடர்பாக மூன்று கூறுவர். அவை உடனமெய், உணர்வுமெய், உணர்த்துமெய் எனபன இவற்றைப் பகுதி மாயை, தூவாமாயை, தூமாயை எனவுங் கூறுப. மேலும் உணர்வுத் தொடர்பால்
|