வீரர் சிவபெருமானின் படையாள் ஆதலின், சிவபெருமானின் அடையாளம் முற்றும் அவருக்கு ஏற்றிக் கூறுவர். தக்கன்வேள்வியில் தலைமையாகச் செருக்குடனிருந்த மால் வாட்கைவீரர் பிறைமுடி மேல் சக்கரத்தினை வீசினன். வாட்கை வீரர் முடியில் பிறை விளங்கியும் அதனைக் கண்டும் தாமோதரனாகிய மாலும் அஞ்சினனில்லை. அதனைக் கண்ணுற்ற வாட்கைவீரர் வாயிலிருந்து எழுந்த தெறுமொலியாகிய உங்கார அதட்டுதலைச் செய்தனர். அச் சக்கரம் அடங்கி வலியிழந்து கீழ்வீழ்ந்தது. உங்காரம் - உட்கொலி; அச்சுறுத்தும் தெறலோசை. தாமோதரன் - கடைக் குணமாகிய தாமத குணப்பொருள்கள் நிறைந்த வயிற்றினையுடையவன். (அ. சி.) சசிமுடி - சந்திரனைச் சூடிய வீரபத்திரர். (4)
7. எலும்பும் கபாலமும் 357. எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த வலம்பன் மணிமுடி வானவ ராதி எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில் எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே. (ப. இ.) விளக்கமிக்க பேரொளி ததும்பும் மணிமுடி தாங்கியவன் சிவபெருமான். அவனே வானவர் முதல்வன். ஆதி - முதல்வன். அயன் அரி என்னும் இருவர்தம் எலும்பினையும் மண்டையோட்டினையும் ஏந்தினவன் சிவனே. அவன் அவ்வாறு ஏந்துதல் தான் ஒருவனுமே அழிவில் முழுமுதல் என்பதைக் காட்டுவதாகும். ஏனை மண்ணவர் விண்ணவர் அனைவர்களும் பிறந்திறக்கும் பீடிலா உயிரினங்களே என்பதையும் அதுவே காட்டும். அச் சிவபெருமான் அவ் எலும்பினையும் மண்டையோட்டினையும் ஏந்தா தொழிந்தால் அவை இற்று மண்ணொடு மண்ணாய்ப் போயழியும். அழியும் மாயா காரியப் பொருள்களும் சிவபெருமான் கையதேல் அழிவினை எய்தாவென்க. இதன் குறிப்பு காரணமாயை என்றும் அழிவினை எய்தாது சிவபெருமான் தாங்குதலில் நிற்கும் என்பதாம். (அ. சி.) வலம் . . . ராதி - ஒளிபொருந்திய அழகிய முடியை உடைய சிவன். (1)
|