209
 

போலும் கருத்தோன்றிப் பிறந்திடும். அக்கரு நீரிடை நிற்கும் நீர்க்குமிழியின் நிழல்போன்று நிற்கும். இதுவே பூதம் ஐந்தும் பொறி பத்தும் ஆகிய பதினைந்து (449) கருவிகளாலாகிய பருவுடல். இதன் கண் யாண்டும் நிலைத்துள்ள நுண்மை ஐந்து, மனம், எழுச்சி, இறுப்பு என்னும் மூன்று ஆக எட்டும் நுண்ணுடல் என்ப. அவ்வுடலுடன் ஆருயிர் பருவுடற்கருவிற் புகும். காவுடை - சுமையாயுள்ள. நிழல் - சாயல். பாருடல் - மூவைந்தாலாகிய உருவுடல். எட்டு - அருவுடலாகிய நுண்ணுடற் கருவிகள் எட்டு.

(அ. சி.) பூ - யோனி. மொட்டு - இலிங்கம். காவுடைத் தீபம் - கரு.

(21)

457. எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களுங்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்1
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.

(ப. இ.) அருவுடலாகிய நுண்ணுடல் ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் புலன்கள் ஐந்தும் அகப்புறக்கலன்களாகிய மனம் எழுச்சி இறுப்பு என்னும் கரணங்கள் மூன்றும் ஆகிய எட்டினாலாயது. இது படைப்புக் காலந்தொட்டுப் பேரொடுக்கக் காலம் வரையில் அழியாதிருக்கும். (இடையே திருவடிப்பேறெய்தும் செவ்வி வாய்ப்பின் அக்காலத்து இந்நுண்ணுடல் ஒடுக்கப்படும்). இந் நுண்ணுடலுடன் கூடிப் பருவுடலிற் புகுந்ததும் ஆருயிர்க்குச் சுட்டுணர்வு ஏற்படும். சுட்டுணர்வைப் பாசவுணர்வெனக் கூறுப. உருவுடலைக் காயப்பை என்ப. அக் காயப்பையினுள் நுண்ணுடலுடன் கூடிய உயிரைப் புகச் செய்பவன் கண்ணுதற் பெருங்கடவுளாகிய சிவபெருமானாவன். அந்நிலையில் அவன் கட்டுவித்தோனாவன். பின்பு செவ்வி வந்துற்றபோது அக் கட்டினை அவிழ்த்துத் தன் திருவடியில் ஒட்டுவிப்போனும் அவனே. அருவுடலிற் காணப்படும் ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ஐந்தும் புலன் என்ப இவ்வைந்தும் உணர்வெழுச்சியினின்றும், தோன்றுவன. இவை நிகழ்தற்கு இடன் செவி, மெய், கண், நாக்கு, மூக்கு என்ப. இஃது, உள்ள புலன் ஐந்தும் உணர்வெழுச்சியிற் றோன்றும், கொள்ளு செவி மெய்கண் நா மூக்கு என்பதனால் அறியலாம். இவற்றை இந்திரியம் எனவும் கூறுப. பாசவுணர்வு - கண் முதலிய கருவிகள் வழியாக வரும் உணர்வு. இதனைச் சுட்டுணர்வு எனவும் பாசம் வாயிலாக உணரும் உணர்வு எனவும் கூறுப. சிவபெருமான் ஆருயிர்களை அவற்றின் வினைக் கீடாகத் திருவருளால் உடலுடன் கூட்டி வினைக் கழிவின்கண் உடலை ஒழித்திடுவன்.

(22)

458. கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்2
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைத்த பரப்பினை
மண்முத லாக வகுத்துவைத் தானே.


1. ஓசைசேர். சிவஞானசித்தியார், 2. 3 - 14.

" பிறப்பொக்கும் திருக்குறள், 972.

2. அகார. சிவஞானபோதம், 4. 1 - 3.