395
 

962. கூடிய எட்டும் இரண்டுங் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள்
தேடி அதனைத் தெளிந்தறி யீரே.

(ப. இ.) எட்டும் இரண்டும் அகர உகரம். இவை உயிரும் இறையுமென்று கூறப்படும். எட்டும் இரண்டும் கூடுங்கால் பத்தாகும். பத்தென்பது யகரம். அஃதுயிர். உயிர் சிவத்துடன் ஒன்றி ஒருமனப்பட்டு நாடப்படும் நந்தியை நாடித் திருவடியுணர்வினுள் வைத்தால் வாடுதலைச் செய்விக்கும் ஐம்புலனும் சிவத்தைத் தேடுதலுக்குத் துணை செய்யும். இங்ஙனம் தேடு நிலையைத் தெளிந்துணர்க.

(அ. சி.) எட்டும் இரண்டும் - அகரமும் உகரமும்.

(69)

963. எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.

(ப. இ.) எட்டு மிரண்டும் பத்து. இதன் அடையாளம் ய. யகரம் உயிர். உயிரின் அடையாளக்குறி. இவற்றை யாவரும் இனிதறியமாட்டார். இதை யறியவல்ல அறிவிலார், இரு மூன்று நான்கு கூட்டும் கணக்குப்போல் பத்தென்பர். சிவபெருமான் திருவடியே பத்தென்பதாகும். செந்நெறியில் கூறப்படும் பருமை நுண்மையாகிய திருவைந்தெழுத்துப் பத்தாகும். சிவக்குறி - சிவக்கொழுந்து; சிவலிங்கம்.

(அ. சி.) எட்டு....பட்டது - அகரம் உகரம் என்று அறியாதவர் எட்டுமிரண்டும் பத்து (இருமூன்று நான்கு) எனக் கூறுவர்.

(70)

964. எட்டு வரையின்மே லெட்டு வரைகீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டும்மிட்டுச்
சிட்டஞ் செழுத்துஞ் செபிசீக் கிரமே.

(ப. இ.) குறுக்கும் நெடுக்குமாக எட்டு வரைகள் கீறப்பட்டால் அதன்கண் அறைகள் நாற்பத்தொன்பது அமையும். இதன்கண் நடுவரையில் சிகரம் பொறிக்கப்படுதல் வேண்டும். மேலும் கீழும் பக்கமும் ஒவ்வோர் அறைகள் தள்ளப்பட ஐவைந்தறைகளாகும். இவற்றின்கண் திருவைந்தெழுத்தை அமைத்து நனிமிக விரைந்து என்ணுக.

(அ. சி.) எட்டுவரை மேலும் கீழும் வரைந்தால் 49 அறைகள் உண்டு. இறைவன் எழுத்து - சி.

(71)

965. தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆனஇம் மூவரோ டாற்றவ ராதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமுஞ்
சேனையுஞ் செய்சிவ சக்கரந் தானே.1


1. பார்த்தனுக். அப்பர், 4. 32 - 4.