1871. உன்னக் கருவிட் டுரவோ னரனருள் பன்னப் பரனே யருட்குலம் பாலிப்பன் என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி தன்னிச்சைக் கீச னுருச்செய்யுந் 1தானே. (ப. இ.) கருவிடுதலாகிய பிறப்பின் பற்றற்று உரவோனும் அரனும் ஆகிய சிவபெருமான் திருவடியை நினைக்க மொழிய அப்பரனே அருள்நெறிக்கு வாயிலாகிய சிவக்குலத்தை அளித்தருள்வன். அதனால் அவர் சிவகுருவாய்த் திகழ்வர். மாணாக்கர்களாகிய மெய்கண்டார்கள் பலர் விரும்புவர். அச் சிவஞானியின் விழைவெல்லாம் சிவனார் விழைவேயாம். அதனால் அச் சிவஞானியாகிய சித்தர் நினைத்தவையனைத்தையும் அப்பொழுதே சிவபெருமான் ஆக்கி அளித்தருள்வன். (அ. சி.) கருவிட்டு - பிறப்பு அற்று. உரவோன் - வல்லமையுள்ள. புதல்வர் - கடவுள் நெறிப்படி நிற்பவர். தன்னிச்சை - கருதும் விருப்பம். (7) 1872. எங்குஞ் சிவமா யருளா மிதயத்துத் தங்குஞ் சிவஞானிக் கெங்குமாந் தற்பரம் அங்காங் கெனநின்று சகமுண்ட வான்தோய்தல் இங்கே யிறந்தெங்கு மாய்நிற்கும் ஈசனே. (ப. இ.) எங்கணும் சிவமாகக் கண்டு அச் சிவத்தின் திருவருளாம் நெஞ்சகத்துத் தங்குபவன் சிவஞானியாவன். அச் சிவஞானிக்கு எங்கணும் விழுமிய முழுமுதல்வன் நிலையுண்மை உலைவின்றித் தோன்றும். அதற்கு ஒப்பு பூதவெளி எல்லாவற்றையும் தன் உள்ளடக்கித் தானாக நீக்கமின்றி நிற்பதாகும். அச் சிவஞானி நிலவுலகத்தில் அருளால் வாழ்ந்துவரினும் எங்கும் நிறைந்துள்ள ஈசனாவன். ஈசன் - ஆண்டான். எங்கும் சிவமாகக் காண்பது என்பதன் பொருள், உலகனைத்தும் சிவன் உடைமை எனவும், உயிரனைத்தும் அவனடிமை எனவும் அவன் ஆரருளால் ஆருயிர் உணர்வின்கண் உணர்வது. (அ. சி.) இங்கு - இவ்வுலகத்தில். (8)
1. பாலைநெய்தல். திருக்களிற்றுப்படியார், 12. " குலங்கொடுத்துக். அப்பர், 6. 20 - 6.
|