பொருட்டுணிவினர் - சித்தாந்த சைவர். இவரே அருஞ்சைவர் எனவும் அழைக்கப்படுவர். ஆருயிர் கட்டுநிலையில் மலத்துடனும், ஒட்டுநிலையில் சிவத்துடனும் ஒடுங்கி அதுவதுவாய் நிற்கும். இந் நிலைக்குப் பளிங்கு, கண், வானம் ஒப்பாகச் சொல்லப்படும் புருவநடுவின்கண் நாம் பொட்டு வைக்கின்றோம். அப் பொட்டு வெண்மையாகவும் செம்மையாகவும் அமையலாம். இயற்கையாக ஏதுமில்லாத புருவநடு வெண்மைசார்ந்தால் வெண்மையாகவும், செம்மைசார்ந்தால் செம்மையாகவும் காணப்படும். இவ் வொப்புக்கூறுதலும் ஏற்புடைத்தாகும். வெண்பொட்டுச் செம்பொட்டு மேவும் புருவநடு, பண்பிவற்றால் தோன்றும் பதிந்து. இந்நிலையில் உயிரிசார்பி என அழைக்கப்படும். அப் பொருண்மையே தரும் சதசத்து என்பதும். இத்தகைய முப்பொருள் உண்மையினை உள்ளவாறு எடுத்துக்காட்டுபவன் சிவகுரு. சித்து - அறிவுடையது. அசித்து - அறிவில்லது. அறிவுடைய உயிர்கட்கும் அறிவில்லாத உடல் உலகங்கட்கும் சார்பிடமாய் நிற்கும் பேரறிவுசேர் பெரும்பொருள் சிவன். இஃது உணர்விலா உடைக்கும் உணர்வுடைய உடற்கும் உயிர் சார்பிடமாய் நிற்பதோடொக்கும். ஆருயிர் அருட்குரவனால் பொருளுண்மை உணர்வது தூநிலையாகும். உண்மை உணராநிலை தூவாநிலை யாகும். தூநிலை - சுத்தம் தூவாநிலை - அசுத்தம். இவ் விரண்டும் ஆருயிர்கட்கு அறும்படி அருள்பவன் சிவகுரவன். மாறாப் பேரின்ப நிலையை மன்னுவிக்கும் மறைமொழி திருவைந்தெழுத்து. அதனை அருளிச்செய்பவன் அத்தனாகிய அருட்குருவாகும். அச் சிவகுரு அருளிக் கூறும் அத் திருவைந்தெழுத்துக் கூற்றிலே எல்லாம் விளக்கமுறும். (அ. சி.) சத்து - சிவம். அசத்து - பாசம். சதசத்து - ஆன்மா. (10) 2021. உற்றிடும் ஐம்மலம் பாச வுணர்வினாற் பற்றறு நாதன் அடியிற் பணிதலாற் சுற்றிய பேதந் துரியமூன் றால்வாட்டித் தற்பர மேவுவோர் சாதக ராமே. (ப. இ.) ஆருயிர்கட்குப் பண்டேபற்றிய பாசத்தினால் ஆணவம் கன்மம் மாயை மாயையாக்கம் நடப்பாற்றல் முதலிய ஐவகை மலங்கள் பொருந்தின. அவற்றின்மாட்டுள்ள பற்றுக்கள் சிவபெருமான் திருவடியில் திருமுறைபாடி வழிபட்டுப் பணிதலால் அற்று ஒழிந்தன. அவ் வுயிர்களைச் சூழ்ந்துள்ள உலகியல் நுகர்பொருள்கள் மாட்டுள்ள அவாவினைப் பேருறக்கமாகிய துரியமூன்றால் வாட்டினர். வாட்டவே தற்பரமாகிய சிவபெருமான் திருவடி தலைக்கூடும். தலைக்கூடவே இறவாப் பேரின்பம் நுகர்வர். அவரே நன்னெறிப் பயிற்சியாளராவர். இவரையே சாதகர் எனக் கூறுப. மூன்றாகிய பேருறக்கம் புலம்பு புணர்வு, புரிவு என்னும் மூன்றிடத்தும் காணப்படும் பேருறக்கம். (அ. சி.) தற்பர மேவுவோர் - சிவத்தை அடைய முயல்வோர். (11) 2022. எல்லாம் இறைவன் இறைவி யுடனின்பம் வல்லார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச் சொல்லா மலமைந் தடங்கியிட் டோங்கியே செல்லாச் சிவகதி சேர்தல் 1விளையாட்டே.
1. ஆர்த்த பிறவித். 8. திருவெம்பாவை, 12.
|