834
 

தொழிலுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொடுக்கும் உடம்பு சிறப்புடம்பு ஆகும். பிறப்புடம்மை நுண்ணுடம்பு என்று கூறுவர். சிறப்புடம்பைப் பருவுடம்பு என்று கூறுவர். இந் நுண்ணுடம்பு வீடுபேறடைதல் அல்லது பேரூழிக்காலம் வரையும் அழியாதிருக்கும். பருவுடம்பு வினைப்போகத்தின் பயனாய் வினைக்கீடாகப் பிறந்து இறந்து மாறிமாறி வரும். இதுவே தாய்தந்தையர் கருவாயிலாக வருவது. இவ்வுண்மையினைத் திருவள்ளுவ நாயனார் :

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்."

(திருக்குறள் - 972)

என்றருளினர். பிறப்புடம்பாகிய நுண்ணுடம்பு யானை முதல் எறும்பீறாகிய அனைத்துயிர்க்கும் வேறுபாடின்றி ஒன்றுபோல் கருவின்றியமைந்ததாகும். இது நம்முடைய கைகளெல்லாம் ஒன்றுபோலுள்ளன. அவற்றைக்கொண்டு உழுதல், எழுதுதல், நெய்தல், தைத்தல், சமைத்தல், பொன்வேலை செய்தல், தச்சுவேலை செய்தல், கொற்றுவேலை செய்தல், கப்பலோட்டுதல் முதலிய பல்வேறு வேலைகளுக்கும் கருவிகள் வெவ்வேறாகக் காணப்படுகின்றவன்றோ? அதுபோல் பருவுடம்புகள் வெவ்வேறாவன.

நுண்ணுடம்பு ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் பூத முதலாகிய தன்மாத்திரை ஐந்தும்; இறுப்பு, எழுச்சி, மனம் மூன்றும் ஆகிய எட்டுங் கூடியதாகும். புத்தி - இறுப்பு. மான் - மனம். அகங்காரம் - எழுச்சி. இவற்றைப் புரியட்டகாயம் என்ப.

(அ. சி.) இருகூறு - தூலம், சூக்குமம். மான் - மனம். புரியட்ட காயம் - சூட்சும சரீரம்.

(2)

2085. எட்டினில் ஐந்தாகும் இந்திரி1யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாயிடும்
ஒட்டிய பாசம் உணர்வது வாகவே
கட்டி யவிழ்ந்திடுங் கண்ணுதல்2காணுமே.

(ப. இ.) மேலோதிய எட்டினுள் தன்மாத்திரை ஐந்தும் புலன் அல்லது இந்திரியம் என்று சொல்லப்படும். மனம் எழுச்சி இறுப்பு ஆகிய மூன்றும் அகப்புறக்கலன் அல்லது அந்தக்கரணம் என்று சொல்லப்படும். இவை ஆரூயிர்களைத் தொன்மையிலேயே ஒட்டியுள்ள ஆணவ ஆற்றல் அகலுதற்கு ஆருயிர்க்கு இயற்கையாகவுள்ள உணர்வை எழுப்புதல் வேண்டும். அதன்பொருட்டு மேலோதிய எட்டினையும் கட்டு மலமாகச் சேர்த்தருளினன் கண்ணுதற் கடவுள். அக் கடவுளே செவ்வி நோக்கி எல்லாக் கட்டையும் அவிழ்த்து அகற்றியருள்வன்; காண்பீராக. இந்திரியத்தைப் புள்ளென (1987) ஓதுகின்றது இத்திருமந்திரம். திருவாதவூரடிகள் தாம் பாடியருளிய செந்தமிழ் மறை முடிபாம் 'திருவாசகத்தின்கண் 'இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோட' என்பதனை ஈண்டு நினைவு கூர்க.

(3)


1. உன்னுருவில். அப்பர், 6. 27 - 4.

2. அந்தமும். " 4. 95 - 2.