98
 

தாம் ஆண்டளவில் மூன்றற்று ஒரு பொருளைத் தப்பாமல் தன்னுட் பெறல்' வேண்டுமென்னும் நல்வழிக்கண் (39) தமிழ் மூதாட்டியர் நவின்றதும் இதனுடன் ஒத்துக் காண்க. இதன்கண் குறிக்கப்பட்ட முப்பதாண்டென்பது செந்தமிழ்க் கற்பியல் திருமணம் அருளால் முடிந்தநாள் தொட்டுள்ள வரையறையாகும். இங்ஙனம் இருதிறத்தாரும் அளக்கும் அளவையின் உண்மையைப் பலர் அறிகின்றிலர். இவ் விருதிறத்தாராகிய கதிரவனும் கண்ணனும் சிவன் திருவாணையின் வழி நின்று விண்ணுறுவாரையும், வினைக்கீடாகப் பிறந்து மண்ணுறுவாரையும் எண்ணப்படும் முப்பதாண்டளவில் இன்பம் பொருள் என்னும் இரண்டினின்றும் ஈர்த்து அறத்தின்பால் நிறுத்துங் கடனுடையராவர். ஆயின் ஆருயிர்கள் அவ்வழி நிற்கும் கருத்துடையவாதல் வேண்டும். அங்ஙனமில்வழி மீண்டும் வினைக்கீடாகப் பிறப்பு இறப்பிற்பட்டு உழலும்.

(7)

228. எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே.

(ப. இ.) வினைக்கீடாக வரையறுக்கப்பட்ட இளமை கழிவதன் முன் உள்ளநாட்களில் பொருள்சேர் புகழால் திருமுறைவழி இடையறாது ஏத்துங்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென வரையறுக்கப்பட்ட நாள்களில் அருள் துணையால் மாசறுத்துத் தூயராய் இறை நினைவுடன் வாழுதல் வேண்டும். இங்ஙனம் ஒழுகாமல் மனம்போல் ஒழுகி வழுக்குற்று இழுக்கடைவாரும் பலர். இதனைப் பொருந்திய நாள்களில் இருந்து கண்டேன் என்க. கண்டேன்: நன்றாற்றுதலாகிய நல்லறஞ் செய்யாது இளமை சிலர்க்குப் பயன் இன்றிக் கழியக் கண்டேன்.

(அ. சி.) இசையினால் - புகழக்கூடிய அறச்செய்கைகளினால். எய்தியநாள் - வரையறுக்கப்பட்ட ஆயுள். எறிவது - அழிவது.

(8)