2490. ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமுங் கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும் வேறே யிருக்கும் விழுப்பொருள் தானன்றே. (ப. இ.) அகத்தின்கண் அமுதப்பெருக்காகிய சிற்றாறு ஒன்றுண்டு. அவ்வாறு அருளால் போய்நிறையும் நெஞ்சக்குளமும் ஒன்றுண்டு. அங்குத் திகழ்வது அளவிடப்படாத சிவநிலை ஆகும். அதன் இயல்பும் நனிமிகு நுண்மையாகும் அங்குக் குவிந்த முலையினையுடைய அருளன்னையை ஒரு கூறாகக்கொண்டு சிறப்பாக வீற்றிருப்பவன் சிவபெருமான். அவனே தவலில் விழுப்பொருளாவன். தவலில் - கெடுதலில்லாத. (அ. சி.) அருவி - அமுதப் பெருக்கு. அகம் குளம் - உள்ளமாகிய குளம். நூறே சிவகதி - அளவற்ற ஆனந்தம். கூறே - பாகத்திலுள்ள. (4) 2491. திகையெட்டுந் தேரெட்டுந் தேவதை யெட்டும் வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற 1வாறே. (ப. இ.) திசைகள் எட்டினையும் ஆண்டு அருளாணையால் காவல் புரியும். காவலர் (2487) ஞாயிறு முதலிய எண்மராவர். அவர்களுக்கு உரிய தேராகிய ஊர்தியும் எட்டாகும். பூதங்கள் ஐந்து, ஞாயிறு திங்கள் உயிர் மூன்று ஆக எண்பெரு வடிவமாக விளங்குபவன் சிவன். இவை எல்லாமாய் நிற்கின்ற ஆதியையுடைய சிவனைக் காணுமாறு காண்க. அஃது அறிதற்பொறி ஐந்து, செய்தற்பொறி ஐந்து, மனம் ஒன்று, புத்தியாகிய இறுப்பு ஒன்று ஆகப் பன்னிரண்டும் புடைபெயராது அசைவற்று நின்றவிடத்து ஆங்கே சிவபெருமான் நிறைந்து தோன்றுவன். இதுவே எட்டிதழ் நெஞ்சத் தாமரையின்கண் உயிர்க்குயிராய்நிற்கும் சிவபெருமான் தோற்றமளித்தருளும் முறைமையாம் என்க. வகை எட்டும் என்பதற்கு எண்புலத்தார் வடிவம் எட்டென்றலும் ஒன்று. (அ. சி.) திகை எட்டும் - எட்டுத் திசைகளும். தேர் எட்டும் - எண்திக்கிறைவர்களின் வாகனங்கள் எட்டும். தேவதை எட்டும் - திசைப்பாலகர் எட்டும். வகை எட்டும் - அப் பாலகர் வடிவங்கள் எட்டும். வகை எட்டும் நான்கும் அற்று - கன்மேந்திரியம் 5, ஞானேந்திரியம் 5, மனம் புத்தி 2, ஆகப் பன்னிரண்டும் ஒழிந்து. முகை எட்டும் - எட்டு இதழ்களையுடைய உள்ளக்கமலம். (5) 2492. ஏழுஞ் சகளம் இயம்புங் கடந்தெட்டில் வாழும் பரமென் றதுகடந் தொன்பதில் ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில் தாழ்வது வான தனித்தன்மை தானன்றே. 1. புகை எட்டும். அப்பர், 6. 33 - 9.
|