1176
 

(.ப. இ.) இடப்பால்நாடி வலப்பால்நாடி நடுநாடி என்று சொல்லப்படுவன மூவணையாகும். அவற்றின்கண் பயிலப்படும் உயிர்ப்பு ஏராகும். அவ் ஏரினால் உழப்படும் நிலம் மூலாதாரமாகும் அம் மூலாதாரம் முக்கோண வடிவிற்று. அதனால் அதனை முக்காணி என்று ஓதினர். அவ் வுயிர்ப்பினை முறையாக நிறுத்தியமைத்தால் நடுநாடியாகிய தறியுறப் பாய்ந்திடும். தறி - வீணாத்தண்டு. நெற்றியமிழ்தினை வற்றா வூற்றினை நெறிப்பட வுண்ணுவார், நாவினை மேலோக்கி எழுப்பி உண்ணாக்கை யொட்டிச் சிறு தொளையினை அழுத்தி அடைப்பர். அம் முறையால் நாக்கை அணையாகச் செய்தென்றோதினர். அறுபகையாகிய செருக்குச் சினம் சிறுமை, இவறல், மாண்பிறந்தமானம், மாணா வுவகை என்னும் அறு பகையும் நடுதல் இல்லாத அகத்தவம் எனப்படும் யோக வயலைச் சிலர் பயிலுவதாகிய உழவினைச் செய்கின்றிலர். வயல் - செறு. ஈண்டு உயிர்ப்பினைச் செறுத்தலால் செறு வென்னும் பெயர் அமைவதாயிற்று. இங்ஙனம் நன்னெறிப்படாதார் பிறப்பு இறப்புக்களாகிய பிணிப்பாம் விலங்குகளைக் காலில் பிணித்துக்கொண்டு பயனில் களராம் பிறவி நிலத்தில் உழுவார் என்க. கால் என்பது வழியென்னும் பொருளுமுடையது. அதனால் மீண்டும் மீண்டும் பிறக்கும் முயற்சியில் பிணிக்கப்படுவர் என்பதும் ஒன்று.

(அ. சி.) மூவணை ஏர் - முந்நாடிக்குரிய வாயு. முக்காணி - மூலாதாரத்துள்ள முக்கோணம். அணிகோலி - வாயுவை முறையாகக் கட்டி. தறி - வீணாத்தண்டு. நாவணை கோலி - நாவை அணைாயகச் செய்து. நடுவிற்செறு - காமாதியாகிய களைகள் இல்லாத யோகமாகிய வயல். கால் அணைகோலி - காலில் விலங்கிட்டு, அதாவது பாசவயப் பட்டு. களர் உழுவார் - களர் நிலத்தை உழுவார், அதாவது பயனற்ற காரியம் செய்வார்.

(7)

2833. ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்
பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடிற்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் 1ளாகுமே.

(ப. இ.) இடப்பால் நாடியாகிய இடைகலையும், வலப்பால் நாடியாகிய பிங்கலையும் ஆகிய இரண்டும் ஏற்றம் என ஓதப்பட்டன. அதனால் ஏற்றம் இரண்டுள என்றனர். நீர்நிலை யொத்த மூல முதலாய நிலைக்களம் ஆறும், ஆயிரவிதழ்த்தாமரையாகிய உச்சித்துளை ஒன்றும் ஆகிய ஏழும் துரவுகள் எனப்பட்டன. மூத்தான் என்று சொல்லப்படும் இடப்பால் நாடியாகிய சந்திரகலை வாயிலாக விடுத்தலைச் செய்யும் மூச்சு இறைத்த நீர் எனப்பட்டது. இளையான் என்று சொல்லப்படும் வலப்பால் நாடியாகிய பிங்கலை வாயிலாக எடுத்தலைச் செய்யும் மூச்சு படுத்த நீர் எனப்பட்டது அவ் வுயிர்ப்பு நடுநாடியின்கண் தடுத்தலைச் செய்து நிறுத்துதல் வேண்டும். அங்ஙனம் செய்யும் வழிவகைகளை அறியாது மீட்டும் விடுத்தலையே புரிவாராயின் அது வீணாகப் பாய்ந்து போகும். அங்ஙனம் போனால் அச் செயல் 'கூத்தி வளர்த்ததோர் கோழிப் புள்ளாமே' என்னும் வாய்மைக்கு ஒப்பாகும். கூத்தியாவாள் விலைமகள். கோழிப்புள் என்பது அவளீன்ற செழுமை வாய்ந்த மக்கள் என்பதாம். அம்


1. பழியுடை. அப்பர், 4. 31 - 6.