2980. ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே யறியுந் தவத்தின் 1அளவன்றே. (ப. இ.) சிவன் மண்ணவர் விண்ணவர் மற்றுமுள்ளவர் எல்லாரினும் மேம்பட்ட பெருமையை உடையவன். ஆயினும் மெய்யன்பர்தம் ஊனார் சிறுமை உடலுட் கலந்து அங்கு நின்றருள்கின்றனன். அவனே எம் இறையாகிய சிவன். உட்கலந்து - உள் கலந்து; உள்ளம் கலந்து என விரிந்து உள்ளமாகிய ஆருயிர்களுடன் கலந்து எனப் பொருள்படும். அவன் காப்போனுள்ளிட்ட எத்தகைய வானவராலும் அளந்தறிய வொண்ணா அளப்பருங் காட்சியன். அவனே எல்லாத் தெய்வங்கட்கும் அவர் தம் தவத்துக்கு ஈடாக அருளாற்றல் நல்கும் திருவாணையன். அதனால் அவனே மாதேவன். நன்னெறி நான்மை நற்றவத்தின் அளவாகத் தன்னைத்தானே ஆருயிர்கட்கு அறியப்படுத்தும் தண்ணளியோன். மாதேவன் - பெரும்பொருட்டெய்வம். (அ. சி.) ஏனோர் - எத்தன்மை உடையவரினும். ஊனே சிறுமையுள் - அற்ப சரீரத்திலும். உட்கலந்து - ஆன்மாவோடு கூடி. (41) 2981. பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக் குண்டாலங் காயத்துக் குதிரை பழுத்தது உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள் பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் 2றார்களே. (ப. இ.) ஆருயிர்களின் உடம்பு ஆலமரத்திற்கு ஒப்பாகும். அம்மரத்தை அதன்கட் டோன்றிய விழுது மதலையாய்த் தாங்குவது போன்று மக்களும் பெற்றோரைத் தாங்குகின்றனரல்லவா? அதனால் அஃதோர் அரிய ஒப்பாகும். அத்தகைய உடம்பாகிய ஆலவிதையினின்று ஒரு பெரு முளை எழுந்தது. அதுவே உள்ளத் துறவாகிய உறுதியென்னும் வைராக்கியமாகும். அம் முளை வளர்ந்து மரமாகி அதனினின்று உருள்வடிவாகிய நிறை பேரின்பமாம் ஆலங்காய் காய்த்தது. அக் காய் சிவனுகர்வாகிய மாங்கனியாகப் பழுத்தது. குதிரை - மா. திருவருளால் அச் சிவப்பெருங்கனியினை உணர்வின்கண் நுகர்ந்தவர் உண்டவராவர். அவர்களே திருவடியுணர்வு கைவந்த பெருந்தவத்தோர்; அவ் வுணர்வு பெறும் நற்றவப் பேறு இல்லார் முழு மூடர்களாவர். அவர்கள் பிண்டமாகிய உடம்பிற் புகுந்து பிறப்பு இறப்புகளுக்கு உட்பட்டு நிங்காப் பெருந்துன்பிற் றூங்குவர். அவர்கள் நன்னெறிக்கு வாராது புன்னெறிப்பட்டு மாறுபடுகின்றனர். (அ. சி.) பிண்டாலம் வித்து - ஆலமரத்துக்கு ஒப்பாகிய உடம்பில் பெருமுளை - சித்த வைராக்கியம். குண்டாலம் - ஆனந்தம். (42)
1. யாதே. அப்பர், 5. 50 - 6. " ஊனி. " 5. 47 - 3. 2. உழப்பின், 11. பட்டினத்தார், திருவிடைம மும், 10. " படியில். 12. வெள்ளானைச் சருக்கம், 2.
|