443. ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப் பாயுங் கருவும் உருவா மெனப்பல காயங் கலந்தது காணப் பதிந்தபின் மாயங் கலந்த மனோலய மானதே. (ப. இ.) அண்டங்கள் பலவற்றையும் பொருந்தி வினைக்கீடாக உழன்று வருந்திய உயிர் இருவராய்க் கலந்து இல்வாழ்க்கையராய் நல்லறம் பேணுகின்றனர். அவ்விருவருடைய அரும்பெரும் பண்புகளால் தோன்றும் கருவும் உருவாகும். அங்ஙனம் உருவாவதற்குத் தாயினுடைய உணவுச் சாரமும் வேண்டும். அவ்வுணவுச் சாரம் மருந்தனைய பல மசாலை எனப்படும் காயம் கலந்ததனால் ஆகும். அவ்வுணவு உடலாந்தன்மை யுண்டாகப் பதிந்தபின் சொல்லொணாப் பெருவேட்கையுடன் கூடி இருவர் உள்ளமும் ஒன்றுபட்ட பெறுபேறே அறிவறிந்த மக்களாகும். சாயத்து - நிறத்தால்; ஈண்டுப் பண்பால். காண - சாரமாய்த் தோன்ற. பதிந்தபின் - தங்கியபின், மாயம்கலந்த - பெருவேட்கை சேர்ந்த. மனோலயம் - உள்ளத் தொருமை. (அ. சி.) ஏய் அங்கு அலந்த - பல அண்டங்களில் பிறந்திறந்து அலைந்து வருந்தின. மாயங் கலந்த - மோக வலைப்பட்ட. (8) 444. கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ் சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.1 (ப. இ.) ஆருயிர் கருப்பையினுள் அருவுடம்போடு மட்டும் இருக்கும். பல்வேறு கருவிகளாக விரியும் மாயாகாரியக் கருவிக் கூட்டங்களைத் தொழிற்படுத்துவது நடப்பாற்றல். உயிர் கருவினுள் அருவுடம்போடு மட்டும் இருக்கும் நிலையினைப் புலம்பு நிலை என்பர். புலம்பு - கேவலம். நடப்பாற்றல் மாயா கருவிகளைக் கூட்டப் புலம்புப் பேருறக்கம் ஆகும். அவ்வுறக்கத்தினின்றும் வேறுபடுத்தி அந்நடப்பாற்றல் நினைவெழச் செய்யும். அதன்மேல் காமிய இன்ப நுகர்வுக்குரிய அன்பு எழும். அதனால் மாயேயமாய்ப் புறத்துத் தோன்றும் ஓசை முதலிய பொருள்கள் அகத்தை எட்டும். அங்ஙனம் எட்டச் செய்வதற்குத் தூண்டுங் கருவியாக நிற்பது அகப்புறக் கலனாகிய எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு என்னும் நான்குமாம். அவற்றைத் தூண்டித் தொழிற்படுத்துங் கருவி நால்வகை ஓசையாகும். இவ்வோசை தூமாயையினின்றும் வெளிப்படுவன. எட்டாதல் - கிட்டும்படியாக. எட்டு: முதனிலைத் தொழிற்பெயர். அதனை எண்ணுப் பெயராகக் கொள்ளின் எண்வகை நுகர்வுப் பொருள்கள் எனக் கொள்க. (அ. சி.) கிளைகூட்ட - தத்துவங்களைக் கூட்ட. (9)
1. அகார. சிவஞானபோதம், 4. 1 - 3. " நிகழ்ந்திடும் சிவஞானசித்தியார், 1. 1 - 24.
|