251
 

அகவையில் முதிர்வும் ஒருங்குணர்த்தும் உண்மை எண்மையான் என்க. அவையே ஏனையாரையும் அப் பயிற்சிக்கண் தூண்டித் தொழிற்படுத்தும் வண்மையுள்ளனவாகும். இந் நெறியால் தெளிவு பெறச் சிவகுருவின் திருவருள் எய்தும.் அத் திருவருட்டுணையால் வேண்டுமேல் காற்றினும் விரைவாய் விண்ணிடைப் பறக்கும் அளியனும் ஆவன். அளியன் - மென்மத்தன்மையுடையன். எண்பெரும பேறுகளுள் ஒன்றாகிய மென்மையாகும். எண்பெரும் பேறு: நுண்மை, பருமை, விண்டன்மை, மென்மை, விரும்பிய தெய்தல், நிறைவுண்மை, ஆட்சியனாதல், கவர்ச்சி என்பன. இவற்றை முறையே அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிராகாமியம், ஆட்சியனாதல், கவர்ச்சி எனலுமாம். வளியினும் - காற்றைவிட வேட்டு - விரும்பத்தக்க. அளியனும் - மென்மைத்தன்மையுடையனும். ஆம் - ஆவன் (விண்ணிற் பறக்கும் தன்மையுடையன் ஆவன் என்பது கருத்து.)

(அ. சி.) வயம் - வசம் (சகரத்துக்கு யகரம் போலி). பழுக்கினும் - முதுமைப் பருவம் எய்தினாலும். பிஞ்சாரம் - இளமைத் தன்மையை எய்தலாம்.

(6)

552. எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே.

(ப. இ.) எங்குத் தங்கநேரினும அங்கெல்லாம் இடமூக்கு வழியாக (இடைகலை) உயிர்ப்பினைப் பதினாறுமாத்திரையளவு எடுத்தலாகிய பூரகத்தைச் செய்வாயாக. செய்தபின் அங்கே தடுத்தலாகிய கும்பகத்தை அறுபத்துநான்கு மாத்திரையளவு செய்க. பின் விடுத்தலாகிய இரேசகத்தை முப்பத்திரண்டு மாத்திரையளவு செய்க. அங்ஙனம் செய்யவே அகத்தவப் பயிற்சியால் உணர்வினுள் ஒலிக்கும் சங்கு முதலிய ஒலிகள் பத்தும் (586) உண்டாகும். அகத்தவம் பயின்றார் பலருள்ளும் இவன் தலைசிறந்தவனாவன்.

(அ. சி.) பூரி இடத்திலே - இடைகலை வழியாய்ப் பிராணவாயுவைப் பதினாறு மாத்திரை உள்ளே வாங்கு. அங்கே பிடித்து - 64 மாத்திரை கும்பித்து. விட்டளவுஞ்செல்ல - 32 மாத்திரை இரேசகம் செய்ய (அஃதாவது வெளியேவிட). சங்கே குறிக்க - சங்கு முதலிய நாதங்கள் கேட்க. தலைவனுமாமே - பிராணாயாமப் பயிற்சியில் தலைசிறந்தவன் ஆகலாம்.

(7)

553. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.

(ப. இ.) உயிர்ப்பினை அகத்தவப்பயிற்சியால் மேலே ஏறும்படி செய்து இடப்பால் மூக்கு வலப்பால் மூக்கு வழியாக இரு கால் - இருமுறை எடுத்தலாகிய பூரித்தலைச் செய்க அங்ஙனம் செய்யும் காற்றை