468
 

கரத்தினையுடையவள். கரம் - திருக்கை. சிவபெருமான் ஒரு கூற்றிலே மாறாது விளங்கும் ஒப்பிலா வளையலை அணிந்தவள். வியத்தகு காரணமாயுள்ளவள். அத்தகைய திருவருளம்மை எளியேன் உள்ளம் பொருந்தி நின்றருளினள்.

(40)

1171. மேவிய மண்டலம் மூன்றுடன் கீழெரி
தாவிய நற்பதத் தண்மதி யங்கதிர்
மூவருங் கூடி முதல்வியாய் முன்நிற்பார்
ஓவினு மேலிடு உள்ளொளி யாமே.

(ப. இ.) பொருந்திய மண்டலங்கள் மூன்றினுக்கும் உரிய தெய்வங்களாகக் கருதப்படுவோர் தீ, திங்கள், ஞாயிறு எனப்படுவர். இம் மூவரும் முதல்வியாரின் திருமுன் அவர் திருவாணையை வேண்டி நிற்பர். அம் முதல்வியாரின் திருவருள்ஒளி இடையறாது விளங்கிக்கொண்டிருக்கும். கீழெரி: நிலத்தினின்றும் மேலோங்கும் எரி. தாவிய நற்பதம்: வானம். திருவருள் ஒளி கண்மூடிய காலத்தும் அகத்து விளங்குமாதலின் ஓவினும் என்றார். ஓவினும்: கண்மூடினும்.

(அ. சி.) ஒவினும் - விலக்கினும்.

(41)

1172. உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள்
வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடுங்
கள்ளவிழ் கோனைக் கடந்துட னேநிற்குங்
கொள்ள விசுத்திக் கொடியமு தாமே.

(ப. இ.) திருவருளம்மை அகத்தே ஒளியோடு காணப்படும் ஆறு நிலைக்களங்களுக்கும் ஒளிகொடுத்துக் கொண்டிருக்கும் முதல்வியாகப் பொருந்துவள். பொருந்தி அந் நிலைக்களங்களுக்குரிய தெய்வங்களுடன் தேன்வழியும் கொன்றைமாலை யணிந்துள்ள சிவபெருமான் வழிக் கலந்து உடனாய்நிற்பள். அவளே, மிகவும் இயற்கைத் தூய்மை எய்தியவள்.

(42)

1173. கொடிய திரேகை குருவுள் இருப்பப்
படியது வாருனைப் பைங்கழ லீசன்
வடிவது வானந்தம் வந்து முறையே
இடுமுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.

(ப. இ.) ஒழுங்காயமைந்த சிறந்த வரைகளுள் குருவுருவாம் திருவருள் உள்ளிருத்தலால் பொருந்திய நிறம் விளங்குகின்ற பொற் கழலணிந்த சிவபெருமானின் திருவுருவம் பேரின்பமாகும். அத் திருவுருவாய் விளங்கும் அம்மை ஆறாதாரங்களுக்கு முதல்வியாவள்.

(43)

1174. ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவருங்
காந்தார மாறுங் கலைமுதல் ஈரெட்டு
மாந்த குளத்தியு மந்திர ராயுவுஞ்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.