12. புவனாபதி சக்கரம் 1282. ககராதி யோரைந்துங் காணிய பொன்மை அகராதி யோரா றரத்தமே போலும் சகராதி யோர்நான்குந் தான்சுத்த வெண்மை ககராதி மூவித்தை காமிய முத்தியே. (ப. இ.) திருமூலநாயனார் வட்ட எழுத்து வழங்கிய மிகப் பழங்காலத்திருந்தவர். அவர் காலத்துத் தமிழின்கண் ஐம்பத்தோர் எழுத்து வழக்கிலிருந்தன. அதனால் இங்ஙனம் ஓதியருளினர். ககர எழுத்து முன்னம் ஐந்தினமாக வழங்கிவந்தது. இதனைக் கவ்வருக்கம் என்பர். இவ்வெழுத்துப் பொன்மைநிறம் என்பர். அகராதி ஓராறும் என்பது ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ என்பன. இவை செம்மைநிறம் என்ப. சகர இனம் நான்கும் தூய வெண்மைநிறம் என்ப. க. அ. ச. என மூவகையாகக் கூறப்படும். இம் மூவகை மந்திரமும் விரும்பிய வாழ்வினைத் தரும் போகம் - வாழ்வு. (அ. சி.) ககாராதி ஓரைந்தும் - தமிழ்மொழியில் செந்தமிழ்க் காலத்துக்கு முன் வட்டெழுத்துக்காலத்தில் இருந்த க வருக்கம் 5-ம். (நாயனார் வட்டெழுத்துக் காலத்தவர் ஆனதால் அக்காலத்து வழக்கப்படி கூறுகின்றார்.) அகராதி ஓராறு - ஆ - ஈ - ஊ. ஏ - ஐ - ஓ. சகாராதி ச வருக்கம் நான்கு காமிய - விரும்பப்பட்ட (1) 1283. ஓரில் இதுவே உரையும்இத் தெய்வத்தைத் தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள் வாரித் திரிகோண மனமின்ப முத்தியுந் தேரில் அறியுஞ் சிவகாயந் தானே. (ப. இ.) மேற்கூறிய ககர, அகர, சகரமாகிய மூவெழுத்தும் கூடிச் சொல்லும் புவனாபதியாகிய இத் தெய்வத்தைத் தெரியுமிடத்து இத்தெய்வத்திற்கு ஒப்பாகப் பிறிதொரு தெய்வம் எங்கும் கிடையாது அதனால், யான் சொல்லுவது ஒன்றனைக் கேட்பாயாக. இத் தெய்வ அடையாளமாக வரைந்து கொள்ளுவது முக்கோணமாகும் இதனால் பெறும் மனம், இன்பம், பேறு, என்னும் மூன்றும் ஆராயின் அறியத்தக்க முழுமுதற் சிவத்தின் திருமேனி யாகும். (அ. சி.) சிவகாயம் - சிவ உருவம். (2) 1284. ஏக பராசக்தி ஈசற்காம் அங்கமே ஆகம் பராவித்தை யாமுத்தி சித்தியே ஏகம் பராசத்தி யாகச் சிவகுரு யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே. (ப. இ.) ஒப்பில்லாத பேரறிவுப் பேராற்றலாகிய பராசத்தி சிவ பெருமானுக்குத் திருமேனியாவள் சிவபெருமானின் திருவுரு தடையிலா
|