804
 

காரணமாயையினின்று முறையே கலக்குற்றுத் தோன்றிய காரியமாயை ஒன்று. அம் மாயை மலகன்மங்களோடு விரவாத பகுதி தூமாயை என்றும், அவற்றுடன் விரவிய பகுதி தூவாமாயை என்றும் இருவகைப்படும். அத்தகைய இருமாயையும், அணுவாகிய சிற்றுயிரும், தானாகிய பேருயிராம் சிவனும் என்னும் இவற்றை இசைத்தருளியவனும் சிவனே. ஒன்றென்று சொல்லப்படும் திருவைந்தெழுத்தாம் பொருண்மறை அறிவித்தருள்பவனும் சிவனே. அவனே 'தென்னாடுடைய சிவன்'. அவனே 'எந்நாட்டவர்க்கும் இறை'. இறை - பதி. ஒன்று - உண்மை உபதேசம்.

(அ. சி.) அசத் சத்து - சீவத்துவம். அணு - ஆன்மா. இசைத்தான் - கூட்டி வைத்தவன்.

(17)

2028. ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
ஈறில் உரையால் இருளை யறுத்தலான்
மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயம்பிலே.

(ப. இ.) சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மைவழித் திருவடிக்கு ஏற்றுமுறையால் சிவகுருவானவன் ஆருயிர்களின் மாயைகன்மங்களை எரித்தருள்கின்றனன். ஈறில் உரையாகிய திருவைந்தெழுத்தால் பொல்லா வல்லிருளாம் ஆணவத்தை அறுத்தருள்கின்றனன். ஒப்பில்லாத பசுபாசத்தை வீடுக என இறைபணியாம் தன்பணியில் நிறுத்தி வாட்டி அருள்கின்றனன். இம் முறைகளைத் திருமுறை வழிக் கூறியருள்கின்ற விழுப்பொருளே சொல்லுமிடத்துச் சிவகுருவாவன். இதன்கண் ஓதப்பெறும் எரித்தல் அறுத்தல் வாட்டல் என்னும் சொற்குறிப்பான் முறையே எஞ்சுவினை ஏன்றவினை ஏறுவினை என்ற மூன்றன் நீக்கம் பெறப்படும். எஞ்சு வினைஎரித்தல் ஏன்ற வினையறுத்தல், துஞ்சவாட் டல்ஏறு சொல் என்ற முறைமைகளை எளிதாகவும் இனிதாகவும் வெளிப்படுத்தியருள்வோன் சிவபெருமானாவன்.

(அ. சி.) ஏறு + நெறியே - உண்டாகும்பொழுதே. ஈறில் உரை - அழியாத உபதேசமொழி. மாறில் - ஒழியாத.

(18)


28. கூடாவொழுக்கம்

2029. கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கு நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே.

(ப. இ.) மேற்பார்வையிட்டு ஏற்பன செய்விப்போன் கண்காணியாவன். அவனே கடவுளும் ஆவன். இவ் வுண்மையினை யறியாது பலர் தவறான செய்கைகள் பலவற்றையும் செய்கின்றனர். அவர்கள் எண்ணத்தில்