858
 

அவன் அனைத்துயிர்களினிடத்தும் அனைத்துப் பொருள்களினிடத்தும் பேரன்பு பூண்ட பித்தன். மண்ணவர் விண்ணவர் அனைவர்கட்கும் அவரவர் தகுதிக்கேற்றவாறு பெருமையளிக்கும் பெரியன். என்றும் பிறப்பில்லாதவன். இவ் வகையாக நாளும் அகம் குழைந்து பாடிப் பரவிப் பணிகின்றவர்கள் நச்சுவாராவர். சிவபெருமான் நச்சுவார்க்கு இனியனாவன். அம் முறையான் அடியேனும் நச்சி உய்ந்தவனாகும். வைத்தன என்பது வைச்சன எனச் செய்யுட் டிரிபெய்திற்று. உச்சம் - சிறப்பு. பிச்சன் - பெருங்காதலன்.

(அ. சி.) அச்சு வகை - மூர்த்தி பேதம், முச்சுமுடன் - அம் மூர்த்தங்களுடன்.

(5)

2133. நாலா றுடன்புருட னற்றத் துவமுடன்
வேறான ஐயைந்து மெய்ப்புரு டன்பரங்
கூறா வியோமம் பரமெனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்வமே.

(ப. இ.) உடன்மெய் இருபத்துநான்கும் ஆன்ம தத்துவமெனப்படும். இவற்றுடன் ஆளின் சிறப்புநிலையும் கூட்டினால் இருபத்தைந்தாகும். சிறப்புநிலை குறிப்பதே 'புருடன் நற்றத்துவம்' என்பதாகும். ஆளின் பொதுத்தன்மையாம் உண்மையை மெய்ப்புருடன் என ஓதினர். அஃது உணர்வுமெய் ஏழாகும். உணர்த்து மெய்யினை 'வியோமம்பரம்' என்றருளினர். அஃது ஐந்து மெய்யாகும். இம் மூன்றுங் கூடிய மெய் முப்பத்தாறாகும். அதுவே அருஞ்சைவர் தத்துவம். வேதாந்திகள் கொள்ளும் மெய் (2136) இருபத்தெட்டென்ப. மெய் - தத்துவம்.

(அ. சி.) புருடன் பரம் - வித்தியா தத்துவம் ஏழு. வியோமம்பரம் - சிவ தத்துவம் ஐந்து.

(6)

2134. ஏலங்கொண் டாங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண் டாங்கே குணத்தி னுடன்புக்கு
மூலங்கொண் டாங்கே முறுக்கிமுக் கோணிலுங்
காலங்கொண் டானடி காணலு மாகுமே.1

(ப. இ.) நாடிகள் பத்தினுள்ளும் சிறப்புடையன இடப்பால் நாடியும், வலப்பால் நாடியாகிய பிங்கலையுமாம். அவ் வுயிர்ப்புக் கோலத்துடன், அதனால் ஏற்படும் குணத்தினுடன் ஆருயிர் உலவும். மூலத்திடத்தும் புகும். அங்கிருந்து ஏனைய நாடிகளுக்குக் கிளர்ச்சியை ஊட்டி எல்லாவற்றையும் எழுச்சிபெறச் செய்யும். இதுவே முறுக்குதலென்பதாகும். அகத்தே காணப்படும் மூன்று மண்டலங்களிலும் விரவித் தன் உண்மை காணப்படும். அங்ஙனம் காணப்பெறும் ஆருயிர் காலகாலனாகிய சிவபெருமான் திருவடியிணையினைச் சாரும். சிவபெருமான்: காலங்கொண்டான். அஃதாவது மாயாகாரியங்களை ஆக்குவதற்குத் தானே தன் திருவருளினைக் கொண்டு காலமெய்யாகத் திகழ்ந்தனன்; அதனால் காலங்கொண்டான் என வழங்கப்பட்டனன். அடியிணையைச் சார்வதே காண்பதாகும்.


1. வித்தையோ. சிவஞானசித்தியார், 1 3 - 7.