(ப. இ.) முழுமுதற் சிவன் அவன் திருவருளால் அடியவர் உண்ணும் முடிவிலா அமிழ்து. எந்நாளும் பண்ணோடு பொருந்திய திருமுறைப்பாடலும் ஆவன். மெய்கண்ட நூற்கேள்வியுமாய் விளங்குவன். தூயவிண்ணாகிய சிவவுலகத்தில் வாழும் அழிவில் காதலர்கட்குத் திருவடிதொழத் திருவைந்தெழுத்துமாகி நின்றனன். (அ. சி.) மருந்து - அமிழ்தம். (54) 948. ஐந்தின் பெருமையே அகலிட மாவது ஐந்தின் பெருமையே ஆலய மாவது ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும் ஐந்தின் வகைசெயப் பாலனு மாமே. (ப. இ.) திருவைந்தெழுத்தின் அளவிலாப் பெருமையினாலேயே எல்லாவுலகமும் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. திருவைந்தெழுத்தின் சிறந்த திருக்குறிப்பே சிவபெருமான் திருக்கோவிலாகும். அது, சிவக்கொழுந்தாகிய சிவலிங்கம் காணப்படும் கருவரை நிலை சிகரம். அதன் அடுத்த மண்டபத்தில் காணப்படும் மனோன்மணி நிலை வகரம்; ஆனேற்று நிலை யகரம். அம்பலவாணர் நிலை நகரம். பலிபீட நிலை மகரம். (2372) அறவோன் ஆகிய சிவபெருமான் அருளும் வழக்கமும் திருவைந்தெழுத்தேயாம். திருவைந்தெழுத்தை முறையாகக் கணிப்பாரைக் காக்கும் காவலன் சிவபெருமானாவன். (பாலன் - காவலன்) (அ. சி.) ஐந்தின் - அஞ்செழுத்தின். (55) 949. வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும் நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன் சீரெழுத் தாய்அங்கி யாயுயி ராமெழுத்து ஓரெழுத் தீசனும் ஒண்சுட ராமே. (ப. இ.) ஓசையின் மூலாமகிய ஓங்காரமய், ஐம்பெரும் பூதங்களின் எழுத்தாய், அவற்றிற்கு அப்பாலுமாய் விண்ணெழுத்து வ. நீரெழுத்து ம. நிலந்தாங்கும் எழுத்து ந. தீ யெழுத்து சி. காற்றாகிய உயிரெழுத்து ய. ஒப்பில்லாத ஓர் எழுத்து சிவன். இவ் வெழுத்துக்களாக நின்றியக்கும் சிவபெருமான் பேரொளிப் பிழம்பினன் ஆவன். (அ. சி.) வேர் எழுத்து - மூல எழுத்தாகிய பிரணவம் (ஆணிவேர்) ஆகிய எழுத்து எழுத்தாணி என்றுங் கூறுப. விண் எழுத்து - வ. நீர் எழுத்து - ம. நிலந்தாங்கி எழுத்து - ந. அங்கி எழுத்து - சி. உயிராம் எழுத்து - ய. ஓர் எழுத்து - சி. (56) 950. நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு நாலாம் எழுத்தது நன்னெறி தானே.
|