ஆறாம் தந்திரம் (வியாமளாகமம்) விநாயகர் காப்பு ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.* 1. சிவகுரு தெரிசனம் (தம்முதல் குருவுமாய்த் தோன்றல்) 1548. பத்திப் பணித்துப் பரவும் அடிநல்கிச் சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச் சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற் சித்தம் இறையே சிவகுரு வாமே.1 (ப. இ.) முழு அன்பாகிய பத்தியினை அடியேன்பால் எழுப்பி எல்லாராலும் தொழப்படும் தன் திருவடியிணையினைத் தந்தருளி, இயற்கைத் தூய செவியறிவுறூஉவாகிய திருவைந்தெழுத்தாம். உபதேச மந்திரத்தால் வழி ஆறினும் உள்ள குற்றங்களைப் போக்கியருள்வன். நிலைபெற்ற சிவமெய்யினையும் நிலைபேறில்லாத மாயாகாரிய உலகியற் பொருள்களையும் இரண்டனுடனும் சார்ந்து இரண்டன் பயனையும் நுகர்ந்து சார்பி எனப்படும் உயிராம் சதசத்தினையும் உணர்வுக்கு உணர்வாய் அருட்கண்ணாலுணர்த்தியருள்வன். ஆதலால் சிவகுருவாக எழுந்தருளி வருபவன் உறுதியாக விழுமிய முழுமுதற் சிவனேயாவன். (அ. சி.) பத்திப்பணித்து - அன்பு கனியச் செய்து. சுத்த உரை - குற்றமற்ற தெளிந்த உரை. துரிசற - மலபந்தங்கள் நீங்க. சோதித்து - அத்துவா சோதனை செய்து. சத்து, அசத்து, சதசத்து - சிவம், பாசம். சீவன். சித்தம் இறையே - உள்ளத்தின்கண் இருக்கும் இறைவனே (1) 1549. பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு நேசித்த காயம் விடுவித்து நேர்நேரே கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்தது ஆசற்ற சற்குரு அம்பல மாமே.2
* இப் பாடலைப் பின்னுள்ள பாடலெனப் பேசுவர் பெரியோர். 1. சத்தசத் சிவஞானசித்தியார், 7. 3 - 1. " அறியாமை. " 8. 2 - 20. 2. எழுமுடல், சிவஞானசித்தியார், 2. 3 - 2.
|