87
 

வறையோடென்று அகத்தே வைப்பர். உயிர் நீங்கினால் அவ்வுடம்பினைக் கண்ணிமைக்கும் நேரம் வரையிற்கூட வீட்டில் வைத்திருக்கப் பொறார். குடம் செய்வதற்கு வளமான முற்றமும் வாய்ப்பான மண்ணும் வேண்டும். அம் மண் குளத்தினின்றும் பெரும்பாலும் எடுக்கப்பெறும். அதுபோல் உடம்புக்கு, தாய் வயிறு முற்றத்தை ஒக்கும். கருப்பை குளத்தினை ஒக்கும். மண் செந்நீரை யொக்கும். வினைமுதற் காரணனாகிய சிவன் குயவனை ஒப்பான்.

(16)

203. ஐந்து தலைப்பறி யாறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே.

(ப. இ.) ஐந்து தலையாகிய ஐம்பொறிகளும், ஆறு பறியாகிய மூலாதார முதலிய ஆறு ஆதாரங்களும், சடையாகிய இடைவெளியின் கண் உள்ள சந்துகள் முப்பதும் உள்ளன. நுண்ணுடம்பு எட்டு; வாயுக்கள் பத்து ஆகப் பதினெட்டு. ஒன்பது தொளைகள். பூதமைந்து, தொழிற் கருவி ஐந்து, உணவுடம்பு முதலிய உடம்பு ஐந்து ஆகப் பதினைந்து. இவையனைத்தும் வெந்து நீறாகிக் கிடந்தன. மேல் விளைவினை எவரும் உள்ளவாறு அறியார். உணவுடம்பு முதலிய ஐந்தும் வருமாறு; உணவுடம்பு, வளிவுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு என்பனவாம். இவற்றை முறையே அன்னமய கோசம், பிராண மயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என்பர்.

(அ. சி.) ஐந்துதலை - ஐம்பொறிகள். பறி ஆறு - ஆதாரங்கள் ஆறு. சடையுள சந்தவை - முதுகெலும்புகள். சார்பு - பொருத்து.

(17)

204. அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங்
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.

(ப. இ.) அத்திப்பழமாகிய உடலும் அறைக்கீரை வித்தாகிய உயிரும் இருவினைப் பயனாகிய இன்பத்துன்பக் கூறுபாடுகளை அவ்வுயிர்க்கு உணவாகிய ஊழாகச் சமைத்து உலகிடைப் பிறப்பித்தனன். அத்திப் பழமாகிய ஊழ்ப்பயனை அறைக்கீரை வித்தாகிய உயிர் உண்டு கழித்தது. எனவே உயிர் நீங்கிய உடம்பினைச் சுடத் துணிந்தனர். கத்துதலாகிய அழுகை யொலியுடன் சுடுகாட்டுக்குக் கொண்டு போயினர். உலைப்பெய்து - உலையிலிட்டுச் சமைத்து. கூழ் இட்டு - சோறுடன் பரிகலத்திலிட்டு. கத்தி - கத்திபோன்ற கூர்மையுடைய பல். இஃது உவமையாகு பெயர் எனினும் ஆம்.

(அ. சி.) அத்திப்பழம் - உடல். அறைக்கீரை நல் வித்து - உயிர். உலை - கருப்பாசயம். கூழ் - ஊழ்.

(18)